பஞ்சாபில் ராஜீவ் சிலைக்கு அவமதிப்பு - முகத்தை சிதைத்து கரி பூசிய அகாலிதள் கட்சியினர் அட்டகாசம்!
பஞ்சாபில் ராஜீவ் காந்தியின் சிலை அகாலி தள் கட்சியினரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1984-ல் பிரதமராக இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்திராவை சுட்டுக் கொன்ற பாதுகாவலர்கள் இருவரும் சீக்கியர்கள் என்பதால் டெல்லியில் சீக்கியர்கள் மீது குறிவைத்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரம் தொடர்பாக நடந்த விசாரணையில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என சமீபத்தில் கோர்ட் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்தக் கலவரத்திற்கு இந்திரா மறைந்த உடனே பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தியும் காரணம் என சிரோன்மணி அகாலி தளம் குற்றம் சாட்டி வந்தது. சமீபத்திய தீர்ப்பை அடுத்து ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டங்களை அகாலி தளம் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லூதியானாவில் சாலம் தேப்ரி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் சிலை, அகாலி தள கட்சியினரால் சேதம்படுத்தப்பட்டது. சிலையின் முகத்தை சேதப்படுத்தி கரி பூசியதுடன் கையில் சிவப்பு கலர் பூசிவிட்டு அகாலி தள இளைஞர் அணி நிர்வாகிகள் சாவகாசமாக புறப்பட்டுச் சென்றனர்.
சிலை அவமதிப்பு தகவல் கிடைத்த காங்கிரசார் விரைந்து வந்து சிலையை சுத்தப்படுத்தினர். பின்னர் பால் ஊற்றி கழுவினர். சிலை அவமதிப்பு செய்த அகாலி தள இளைஞர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை. லூதியானா நகர வீதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றித் திரிந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இருவரும் போலீசில் தாங்களாகவே சரணடைந்ததாக கூறப்படுகிறது.