பூஜை செய்து மாட்டுப்பொங்கல் கொண்டிய தமிழக கவர்னர்
சென்னை: பட்டினப்பாக்கத்தில் இன்று பொதுமக்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோமாதா பூஜை செய்து மாட்டுப் பொங்கலை கொண்டாடினார்.
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டன. கோமாதாவை போற்றும் வகையில் அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் இன்று பொது மக்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாட்டுப் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.மேலும், பட்டினப்பாக்கம் கடலில் இறங்கி பால் ஊற்றி மலர்களை தூவி தீபாராதனை காட்டி வணங்கினார்.
பின்னர், அங்கிருந்து அருகில் உள்ள கோவில் மைதானத்துக்கு சென்று கோமாதா பூஜை நடத்தினார். பசுவுக்கும், கன்றுக்கும் தீபாராதனை காட்டி தொட்டு வணங்கினார். அவற்றுக்கு கீரைகளையும், பொங்கலையும் கொடுத்தார்.
பின்னர், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு, திரண்டிருந்த பொதுமக்களுக்கு தமிழில் ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வை நேரில் பார்த்த பொது மக்கள் இன்பதிர்ச்சி அடைந்து மகிழ்ந்தனர்.