உரிய மரியாதை இல்லை - உ.பி.யிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்சிகள் லடாய் !
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இரு சிறிய கட்சிகள் உரிய மரியாதை இல்லாததால் கூட்டணியிலிருந்து வெளியேறப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளன. ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கரில் பா.ஜ. தோற்றது அதன் கூட்டணி கட்சிகளுக்கு கொண்டாட்டமாகவே போய்விட்டது.
இதை சாக்காக வைத்து லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.க.வை மிரட்ட ஆரம்பித்துள்ளன. பீகாரில் முரண்டு பிடித்த ஐக்கிய ஜனதா தளத்துக்கு தமக்கு சமமாக தொகுதிகளை ஒதுக்கி நேர்ந்தது.
மகாராஷ்டிராவிலோ சிவசேனா கூட்டணிக்கு இன்னும் பிடி கொடுக்கவில்லை. ஏற்கனவே மத்திய அரசில் பங்கு வகித்த லோக்சமதா கட்சியும் வெளியேறிவிட்டது.
இந்நிலையில் உ.பி.யிலும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள இரு சிறிய கட்சிகள் முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த முறை பா.ஜ.க கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற கட்சி அப்னா தள்.
இக்கட்சியின் எம்.பி.யான அனுப்ரியா படேல் மத்திய சுகாதார இணையமைச்சராக உள்ளார். இவருடைய கணவர் ஆசிஷ் படேல் கட்சியின் செயல் தலைவர்.
சமீப காலமாக பா.ஜ.க தங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று ஆசிஷ் படேல் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யில் 8 மருத்துவக் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்த அனுப்ரியா படேலை அரசு நிகழ்ச்சிகளுக்கு உ.பி.மாநில பா.ஜ.க அரசு அழைக்காமல் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் 29-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கும் அழைக்கவில்லை. இப்படியே அலட்சியப்படுத்தினால் மாயாவதி- அகிலேஷ் கூட்டணியில் அப்னா தள் சேரத் தயங்காது என்று ஆசிஷ் படேல் கூறியுள்ளார்.
இதே போன்று பாரதிய சமாஜ் கட்சி என்ற சிறிய கட்சியும் பா.ஜ.வுடன் முரண்டு பிடித்து வருகிறது. உ.பி.மாநில அரசில் அமைச்சராக உள்ள இக் கட்சியின் தலைவர் ஓ.பி. ராஜ்பர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்காவிட்டால் வெளியேறுவோம் என எச்சரித்துள்ளார்.