பிஜேபி கூட்டணி தான் இறுதி வழி! - மகன் மூலமாக ஆழம் பார்க்கும் பிரேமலதா

விஜயகாந்த் மகனைக் களமிறக்கி ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. எதையாவது செய்து இழந்த கட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனப் போராடி வருகிறார்.

வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிஜேபி கூட்டணி எனப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் தேமுதிக பொறுப்பாளர்கள். தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஜெயலலிதா, விஜயகாந்த் நேரடி மோதல் காட்சிகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு 'திராணியாரே வருக..' என ஊரெல்லாம் போஸ்டர்கள் முளைத்தன. சினிமா வாழ்க்கையைப் போல் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலோடு செயல்பட்டவர் விஜயகாந்த்.

கடந்த பத்தாண்டுகளாக உடல்நலத்தில் அவர் அக்கறை காட்டாததன் விளைவு, தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார். மோடி பிரதமர் என்ற கோஷத்தைக் கடந்த 2014 தேர்தலில் மாநிலம் முழுக்கச் சொன்னவர் விஜயகாந்த்.

அதனால் தான் பதவியேற்பு வைபவத்தின்போது விஜயகாந்த் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினார் மோடி. இதன் பிறகு தேமுதிக வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசின் ஸ்டேண்டிங் கவுன்சில் பதவிகளும் வந்து சேர்ந்தன.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு சிங்கப்பூருக்கு சிகிச்சை எடுக்கச் சென்றார். தொண்டையில் நடந்த ஆப்ரேஷனுக்குப் பிறகு அவரது பேச்சிலும் நடையிலும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும், பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

2016- தேர்தலில் மாநிலம் முழுக்க பயணம் செய்தார். இந்த அலைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு விஜயகாந்த் ஹெல்த் குறித்த வதந்திகள் வேகமாகப் பரவியது.

இதற்கு பிரேமலதாவும் சுதீஷும் விளக்கம் கொடுத்தாலும் அவை எதுவும் சரியான விளக்கத்தை தொண்டர்களுக்குக் கொடுக்கவில்லை. ' விஜயகாந்த் உடல்நிலை இந்தளவுக்கு வந்ததற்குக் காரணமே பிரேமா தான். கேப்டனைச் சுற்றி வளையம் போட்டு வைத்திருக்கிறார்.

இப்ராகீம் ராவுத்தர், மதுரை சுந்தர்ராஜன் போன்ற நெருங்கிய நண்பர்களை மட்டும் பிரிக்கவில்லை. கேப்டனின் ரத்த உறவுகளையே அவர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை' எனச் சிலர் பேசினர். காவேரி மருத்துவமனையில் கருணாநிதி இருந்த காலத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார் விஜயகாந்த்.

அவரது கல்லீரலும் கிட்னியும் மோசமாகச் சீரழிந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. இப்போது சில வாரங்களாக வெளியுலகின் பார்வையில் படாமல் வைக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்பதால், மகனைக் களமிறக்கியிருக்கிறார் பிரேமலதா.

திமுகவோடு கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதால், மீண்டும் பிஜேபியோடு பேசத் தொடங்கியிருக்கிறார் சுதீஷ். இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர இருப்பதால், தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டாராம் பிரேமலதா.

- அருள் திலீபன்

More News >>