கூட்டணிக்கு வேட்டு வைக்கிறார்கள்! திருமாவளவனை நோக வைத்த ரவிக்குமார், வன்னியரசு!
ரவிக்குமார், வன்னியரசு ஆகியோரது செயல்பாடுகளால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் திருமாவளவன். 'இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும்' என திருமாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் சில நிர்வாகிகள்.
'என்னுடைய வீட்டில் வேலை பார்ப்பவர்கள் கூட தலித்துகள் தான்' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனியார் ஊடகத்தில் பேட்டி கொடுத்திருந்தார். 'இது வைகோவின் பண்ணை மனோபாவத்தைக் காட்டுகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்' எனக் கிளம்பினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.
இந்த சம்பவத்தால் சூடான வைகோ, 'சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் செலவுக்குப் பணமில்லாமல் தவித்த திருமாவளவனுக்கு 50 லட்ச ரூபாயைக் கடன் வாங்கிக் கொடுத்தேன்' என்றார். பணம் தொடர்பான ரகசியங்கள் வெளிவருவதை விரும்பாத திருமாவும், ' உள்ளுக்குள் எதையும் வைத்துக் கொள்ளாத மென்மையான குணம் உடையவர் வைகோ' என நேரில் சால்வை அணிவித்துக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.
ஆனால், 'அவரது பேச்சை நான் விடுவதாக இல்லை' எனப் பேசி வருகிறார் வன்னியரசு.
இந்த சம்பவத்தின் வெப்பம் காய்வதற்குள் நேற்று கம்யூனிஸ்ட்டுகள் முகாமில் தீயைக் கொளுத்திவிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.
அதுவும் கீழவெண்மணி என்ற தீப்பந்தத்தை, சாதி வட்டத்துக்குள் சுருக்கிக் கட்டுரை ஒன்றை தீட்டினார். இதைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சித்த சிலர், ' திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.
'கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு' என்ற கட்டுரையை எழுதியிருக்கும் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின் போராட்டத்தால், ஒருங்கிணைப்பால், ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று ஊடகங்களில் திருமாவளவன் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.
‘வெண்மணி விவகாரத்தில் இடதுசாரிகளின் தியாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதை நன்றி உணர்வோடு கூற விடுதலைச் சிறுத்தைகள் கடமைப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் திருமாவளவன். இதை ஓர் வர்க்கப் போராக பார்ப்பதா சாதிக்குள் குறுக்கி தலித் பிரச்னையாக பார்ப்பதா' என விமர்சனம் செய்திருந்தனர்.
'தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகிகள் அடங்குவதில்லை என்பதையே மேற்கண்ட இரு சம்பவங்களும் காட்டுகின்றன. இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எதிராக அட்டைக் கத்தி என்றெல்லாம் வாள் சுழற்றினார் வன்னியரசு.
இதையும் திருமாவளவன் கண்டிக்கவில்லை. வைகோ, இடதுசாரிகள் என கட்சிக்குள் இருப்பவர்களின் விமர்சனங்கள் எல்லை மீறிச் செல்கின்றன. இது விசிகவின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல' என்ற விவாதங்களும் நடக்கத் தொடங்கியுள்ளன.
-அருள் திலீபன்