வீதிக்கு வர காத்திருக்கும் விஜயகாந்த் குடும்ப மோதல்- விஜயபிரபாகரனை கொம்பு சீவும் தேமுதிக நிர்வாகிகள்!

சட்டமன்றத் தேர்தலில் 8, 10 என ஓட்டு விகிதத்தில் கெத்து காட்டிய தேமுதிக, கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறது. போதாக்குறைக்கு, சுதீஷின் ஆட்டத்தால் இருக்கும் நிர்வாகிகளும் மாற்று முகாம்களைத் தேடிப் போக ஆரம்பித்துவிட்டனர்.

திமுக கூட்டணிக்காக கடந்த 2016 தேர்தலில் சபரீசனோடு அளவளாவிக் கொண்டிருந்தார் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ். இருவரும் ஓட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது என தேமுதிகவின் அப்போதைய எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தனர்.

ஒருகட்டத்தில், தேமுதிகவின் டிமாண்டுகளை ஏற்றுக் கொண்ட திமுக, கூட்டணி ஆட்சி என்ற வார்த்தைக்கு மட்டும் பிடிகொடுக்கவில்லை. அப்படியும் துரைமுருகன் போன்றவர்கள், ' முதலில் சரியெனச் சொல்வோம். பிறகு கழட்டிவிட்டுவிடுவோம்' எனக் கூறியுள்ளனர். திமுகவுக்கு சுக்ர திசை வீசப் போகிறது என நினைத்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

கூட்டணி அமையும் என நினைத்த சபரீசன் நினைப்பில் மண் விழுந்தது. பெரும் தொழிலதிபர்கள் மூலமாக விஜயகாந்தை சரிக்கட்டிவிட்டனர். சொல்லப்போனால் பிரேமலதாவையும் சுதீஷையும் சரிக்கட்டிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், மக்கள் நலக் கூட்டணியை உண்மையிலேயே விஜயகாந்த் விரும்பவில்லை. மனைவி கொடுத்த அழுத்தத்தால்தான் மாறினார். இந்த முடிவால் ஆத்திரப்பட்ட ஈரோடு சந்திரகுமார், மேட்டூர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

இதற்குக் காரணம் சுதீஷ் தான் என்பதில் கோபத்தில் இருந்தார் விஜயகாந்த். தேர்தல் முடிவுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டது தேமுதிக. இதனை ஏற்க முடியாதவர், இனி கட்சி ஆபீஸ் பக்கமே வரக் கூடாது எனக் கூறி, அவரை ஒதுக்கிவைத்தார்.

தேர்தல் சமயத்தில் வேட்பாளர்களுக்கு கொடுப்பதாகச் சொன்ன தொகையையும் சுதீஷ் கொடுக்கவில்லை. இதனால் மேலும் பலர் வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டார்கள். இப்போது குடும்ப மோதல் உச்சத்தில் இருப்பதால், சுதீஷை ஓரம்கட்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.

சுதீஷ் பக்கத்தில் இருந்தால் தேமுதிக அழிந்துவிடும் எனவும் கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த மோதல் குறித்து விஜய பிரபாகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லை. எனது வளர்ச்சிக்குப் பக்கபலமாக சுதீஷ் இருக்கிறார் எனப் பதில் கொடுத்தார். ஆனால் குடும்ப மோதல் வீதிக்கு வரக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்கின்றனர் தேமுதிக பொறுப்பாளர்கள்.

More News >>