டீக்கடை மேஜையாக மாறிய தென்னை மரங்கள்! - கலங்கும் டெல்டா விவசாயிகள்

கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது கஜா புயல். இதன் பாதிப்பு குறித்து ஊடங்கங்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா புயலால் தமிழக அளவில் இதுவரை 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 351 முகாம்களில் 1,75,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் வருவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 471 முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது. புயல் காரணமாக 70 கால்நடைகள், 291 செம்மறி ஆடுகள், 1,296 கோழிகள், 158 ஆடுகளும் புயல் இறந்துள்ளன. மேலும் 30 மான்களும் கஜா புயலால் இறந்துள்ளன' என்றார்.

இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டுவிட்டாலும், அவர்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை, விழுந்து கிடக்கும் மரங்களை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். மரக் கழிவுகளால் நோய்கள் பெருகுவதும் நீண்டகாலம் பார்த்துப் பார்த்து வளர்ந்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதையும் பார்க்க சகிக்க முடியாமல் அதன் அருகே உட்கார்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் யாராவது வந்தால்கூட, அய்யா டீசலுக்குக்கூட நாங்க காசு கொடுத்துடறோம். இந்த மரத்தை மட்டுமாவது கொண்டு போயிருங்கய்யா எனக் கதறுகின்றனர். மரத்தை அறுக்க வருகிறவர்களும் தேக்கு மரங்கள், பழைய மரங்கள் எனப் பணத்தை எதிர்பார்த்து வெட்டி எடுக்கிறார்களாம்.

அவர்கள், இந்த விவசாயிகளின் கோரிக்கைகளை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த நிலையில், அறந்தாங்கி அருகே நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, நமது நண்பர்கள் விவசாயக் குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பயனுள்ள பொருளாக மாற்றி, அதற்கு புது வடிவம் கொடுத்துள்ளனர். தென்னை மரங்களை சரியான அளவில் வெட்டி, அதனை இருக்கைகளைப் போல வடிவமைத்துள்ளனர். தயார் செய்யப்படும் இருக்கைகள், தேநீர் கடைகள், பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அழிவிலும்கூட இவ்வளவு அழகாக யோசித்தவர்களை நினைத்து வியக்கத் தோன்றுகிறது. அதேநேரம், வாழ்வாதாரங்களாக விளங்கிய தென்னை மரங்கள், மேஜையாக மாறிக் கிடப்பதைப் பார்க்க வேதனையாகவும் இருக்கிறது எனக் கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.

More News >>