கண்மணி குழந்தைகளின் பார்வைக்கு வேட்டு வைக்கும் ஸ்மார்ட்போன்!ஜப்பானிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
"இந்தக் கால இளைஞர்கள் குனிந்த தலை நிமிராதவர்கள்" என்று ஒருவர் கூறினார். "ஏன் ரொம்ப வெட்கப்படுறாங்களா?" என்று அப்பாவியாய் கேட்டார் அவரது நண்பர். "போனை விட்டு கண்ணை எடுக்கவே இல்லையே... பிறகு எப்படி நிமிர முடியும்," என்று கிண்டலாக பதில் கூறினார் முன்னவர்.
பெற்றோர் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் இன்றைய சமுதாய உண்மை இதுதான். தவழும் குழந்தை முதல் கல்லூரி இளைஞன் வரைக்கும் ஸ்மார்ட்போன் உலகத்தில்தான் வாழ்கிறார்கள்.
ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுவோர் எண்ணிக்கையில் ஜப்பான் உலகில் மூன்றாமிடம் வகிக்கிறது. ஜப்பானில் 41 விழுக்காடு ஆண்களும் 32 விழுக்காடு பெண்களும் ஸ்மார்ட்போன் மூலம் விளையாட்டில் ஈடுபடுகின்றனராம். 2018ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரைக்கும் ஜப்பானிய கல்வி துறை மாணவ மாணவியர் பார்வைத்திறன் குறித்து ஆய்வொன்றை நடத்தியது. அதில் கிடைத்துள்ள பல தரவுகள் அதிர்ச்சிரகத்தை சேர்ந்தவை.
மனிதரின் சாதாரண பார்வைத்திறனாக 6/6 என்பது கூறப்படுகிறது. ஜப்பானின் 34 லட்சம் மாணவ மாணவியருள் 25.3 விழுக்காட்டினருக்கு பார்வைத்திறன் 6/6 என்பதை விட குறைவாக உள்ளது இந்தக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தொடக்க பள்ளி மாணவர்களுள் 34.1 விழுக்காட்டினர், உயர்நிலை பள்ளி மாணவர்களுள் 67.09 விழுக்காட்டினருக்கு முழுமையான பார்வைத்திறன் இல்லை என்று இந்த முடிவுகள் கூறுகின்றன.
பொதுவாகவே ஸ்மார்ட்போன்களிலிருந்து வரும் புளூலைட் என்னும் நீலநிற ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பலர் அது உண்மையல்ல என்று மறுத்து வருகின்றனர். புளூலைட் ஃபில்டர்களுடன் தற்போதைய ஸ்மார்ட்போன்கள் வருவதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. அதிலிருந்தே நீலநிற ஒளி குறித்த கருத்து எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது.
ஸ்மார்ட்போன்களிலிருந்து வரும் செறிவான ஒளி, கண்களில் குணப்படுத்த இயலாத பாதிப்பை உருவாக்குகிறது. இந்த ஒளியை நீண்ட நேரம் பார்ப்பதன் மூலம் பார்வைத்திறனில் குறைபாடு உண்டாகிறது. ஸ்மார்ட்போன் ஒளி, கண்களுக்குள் வேதி மாற்றத்தை ஏற்படுத்துவதால், கண்களிலுள்ள ஃபோட்டோரிசெப்டிப் செல்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. அந்தக் குறைபாட்டை சரி செய்ய இயலாது.
2017ம் ஆண்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, நீண்டநேரம் ஸ்மார்ட்போனை பார்ப்பது கண்களுக்கு அசதி, வறட்சி போன்றவை உண்டாக்குவதோடு, 'கணினி பார்வை குறைபாடு' என்னும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமுக்கு காரணமாகிறது என்றும் கூறுகிறது. ஆகவே, தொடர்ந்து நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துதல் காலப்போக்கில் பார்வை இழப்பு உள்ளிட்ட கண் குறைபாடுகளை கொண்டு வரும் என்று அஞ்சப்படுகிறது.