ஐந்து நாட்களுக்குள் மூன்று தற்கொலை: உயிரைப் பறிக்கும் தொழிற்கல்வி
ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில் நுட்ப கழகத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோட்டா என்ற நகரம். அகில இந்திய அளவில் தரம் வாய்ந்த தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளுக்கு இந்நகரில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயிற்சியளித்து வருகின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் மாணவ மாணவியர் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
பீஹார் மாநிலத்தில் சிவன் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரும் இங்கு படித்து வந்தார். பெற்றோரின் தொலைபேசி அழைப்புகளை அவர் ஏற்காததால் அருகில் தங்கியிருந்த உறவினர் ஒருவரை நேரில் சென்று பார்க்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மாணவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது குறிப்பிட்ட மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
டிசம்பர் 22ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி என்ற இடத்தில் 16 வயது மாணவர் ஒருவரும், டிசம்பர் 24ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணங்களை விளக்கும் கடிதங்கள் எதுவும் சிக்காத நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஐந்து நாட்களுக்குள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
படிப்பின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தமே பெரும்பாலான மாணவ மாணவியரை தற்கொலை நோக்கி தள்ளுகிறது என்று கூறப்படும் நிலையில் "பெற்றோர் தங்கள் கனவுகளை பிள்ளைகள்மேல் திணிக்கக்கூடாது. விருப்பமற்ற துறைகளில் படிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படும்போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்" என்று முதுநிலை அதிகாரி ஒருவர் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளார்.