5.7 அடி தலைமுடி வளர்த்து குஜராத் சிறுமி கின்னஸ் சாதனை
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுமி 5.7 அடிக்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோடசா பகுதியை சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (16). பிளஸ் 1 படித்து வரும் இவருக்கு சிறு வயதில் இருந்தே நீளமாக தலைமுடி வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இதனால், தலைமுடி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் கவனமாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நிலன்ஷி படேலுக்கு தற்போது 5.7 அடி (170.5 செ.மீ.,) நீளம் தலைமுடி வளர்ந்துள்ளது. இதன்மூலம், நிலன்ஷி முந்தைய சாதனையை முறியடித்து 2019ம் ஆண்டுக்கான புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, அர்ஜென்டினாவை சேர்ந்த ஏபிரில் என்ற பெண் 152.5 செ.மீ நீளம் தலைமுடியும், தொடர்ந்து கெயிட்டோ என்ற பெண் 155.5 செ.மீ., நீளம் தலைமுடியும் வளர்த்து அடுத்தடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர். இவர்களின் சாதனைகளை முறியடித்த நிலன்ஷி 170 செ.மீ., நீளத்திற்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்ததுடன் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
நிலன்ஷியின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக தயாரிப்பாளர்கள் அங்கீகரித்துள்ளனர். நிலன்ஷியும் சமீபத்தில் இத்தாலி சென்று அங்கீகார கடிதத்தை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.