பினராயி விஜயன் குறித்த சர்ச்சை கார்ட்டூன் - மன்னிப்பு கேட்ட பா.ஜ.க.ஆதரவு தினசரி!
கேரள முதல்வர் பினராயி விஜயனை சாதி அடையாளப்படுத்தி கார்ட்டூன் வெளியிட்ட பா.ஜ.க ஆதரவு தினசரி நாளிதழ் மன்னிப்பு கேட்டதுடன் சம்பந்தப்பட்ட கார்ட்டூனிஸ்டையும் வெளியேற்றியுள்ளது.
கேரளாவில் வெளிவரும் பா.ஜ.க.வின் ஆதரவு நாளிதழான ஜென்மபூமியில் கடந்த திங்கட்கிழமை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குறித்த கேலிச்சித்திரம் கேரளாவில் புயலைக் கிளப்பியது. முதல் பக்கத்தில் வெளியான கார்ட்டூனில், சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் பெண்களை திரட்டி மனிதச் சங்கிலி நடத்த பினராயி விஜயன் திட்டமிட்டதை எதிர்த்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதை பற்றி இருவர் விவாதிக்கின்றனர்.
அப்போது குறுக்கிடும் மற்றொரு நபர், தென்னை மரம் ஏறுபவர்களை எல்லாம் முக்கிய பதவியில் அமர்த்தினால் இப்படித்தான் என்று கமென்ட் அடிக்கிறார். பினராயி குடும்பமும் தென்னை மரம் ஏறும் தாழ்த்தப்பட்ட தியா சாதி ஆகும்.
இந்த கார்ட்டூன் வெளிவந்தது முதலே ஆளும் இடதுசாரி கட்சி மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்திற்கும் ஆளானது.
எதிர்ப்புகளைப் பார்த்து ஜென்ம பூமி தினசரி கார்ட்டூன் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அத்துடன் கார்ட்டூன்ஸ்டையும் பணியை விட்டு நீக்கி விட்டது.