பாமகவுக்கு எந்த டிமாண்டும் இல்லை! - பிஜேபி கூட்டணிக்கு தமிழிசை சிக்னல்

'லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நான் பார்த்து கொள்கிறேன். அதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், கட்சியை பலப்படுத்துங்கள் எனக் கடந்த ஜூலை மாதம் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார் பிஜேபி தேசியத் தலைவர் அமித்ஷா.

சென்னை ஈசிஆரில் உள்ள கோல்டன் பீச்சில் நடந்த கூட்டத்தில்தான் இந்தக் கருத்தைப் பேசினார் அமித் ஷா. இந்தக் கூட்டத்தில் கட்சியில் அமைப்புரீதியாக உள்ள 48 மாவட்டங்களுக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகளை அவர் நியமித்தார். 39 தொகுதிகள், 234 சட்டசபை தொகுதிகள், 60 ஆயிரம் பூத் கமிட்டி குழு உறுப்பினர்கள் என அமித் ஷாவிடம் நம்பிக்கையைப் பெறுவதற்குப் போராடினார் தமிழிசை. இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடந்ததற்குக் காரணம், பாமகவின் முன்னாள் எம்எல்ஏக்களான திருவள்ளூர் ரவிராஜ் உள்ளிட்ட 3 பேர் பிஜேபியில் இணைந்ததுதான். அவர்கள்தான் அமித் ஷா கூட்டத்துக்கு ஆள் திரட்டித் தந்தனர்.

லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய தமிழிசை, ' தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும் விரைவில் கூட்டணி குறித்து பேசப்படும். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நன்றாக உள்ளனர். ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து செயல்பட்ட தி.மு.க எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான திட்டத்தினை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். தலைப்பு செய்தியாக வருபவர்கள் தலைவராக வர முடியாது' என்றார். அவர் சொன்னது போலவே பாமகவுடன் கூட்டணி பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்களாம்.

இதைப் பற்றிப் பேசும் பிஜேபி பொறுப்பாளர்கள், ' விரைவில் சென்னை வரவிருக்கிற மோடியின் கூட்டத்துக்கும் ஆட்களைத் திரட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. அமித் ஷா கலந்து கொண்ட கூட்டத்துக்கு முன்னாள் பாமகவினர் சிலர் செய்து வரும் வேலைகளால் ஆத்திரத்தில் இருந்தார் ராமதாஸ். இதைப் பற்றி ட்விட்டரிலேயே அவர் நக்கலடித்தார். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மந்திர மாலை என்ற மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். மந்திர மாலை என்பது வன்னிய சமூகத்தின் உயிர்நாடியாக பார்க்கப்படுகிறது. போன மாதமே நடக்க வேண்டிய மந்திர மாலை மாநாடு, இன்றைய தேதி வரையில் நடக்கவில்லை.

இதற்கு ஒரே காரணம், பாமக வருகையை மோடி எதிர்பார்த்துக் காத்திருப்பது தானாம். அதனால்தான் வடமாவட்டங்களை குறிவைத்து ஆள் பிடிக்கும் வேலையைத் தமிழிசை செய்யவில்லை என்கிறார்கள். பாமகவின் பலம் குறித்து டெல்லி தலைவர்களிடம் பேசிய தமிழிசையும், ' பாமக எந்தவித டிமாண்ட் இல்லாமல் தனித்துவிடப்பட்டிருக்கிறது. அதனால், அவர்கள் நம்மிடம் வந்துதான் ஆக வேண்டும். அவர்களின் பலத்துக்கு ஏற்ப சீட்டுகளை ஒதுக்க வேண்டும்' எனக் கூறியிருக்கிறாராம். டெல்லியும் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டது' என்கிறார்கள்.

-அருள் திலீபன்

More News >>