திருச்சி சிவாவுக்கு முடிவுரை! சசிகலா புஷ்பா காரணம் அல்ல.. கனிமொழி!

திருச்சி சிவாவுக்கும் கனிமொழிக்கும் இடையிலான மோதல்தான் அறிவாலயத்தின் ஹாட்டாபிக்காக பேசப்படுகிறது. சிவாவைக் கட்டம் கட்டும் வகையில் சில வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள் சிலர்.

திமுகவின் அறிவுசார் பிரசார பீரங்கியாகப் பார்க்கப்படுகிறவர் திருச்சி சிவா. தற்போது மாநிலங்களவை திமுக உறுப்பினராக இருக்கும் கனிமொழி, மாநிலங்களவை தலைவராகவும் இருக்கிறார். இந்தப் பதவி தனக்கு வந்து சேரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருச்சி சிவா.

அது கிடைக்காமல் போய்விடவே, நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு குழுவில் தலைவர் பதவி கிடைக்கும் எனவும் நம்பினார். கருணாநிதி மருத்துவமனையில் இருந்தநேரம், அப்படி எந்தப் பதவிகளிலும் நாம் இருக்கக் கூடாது எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார் ஸ்டாலின்.

தொடர்ந்து தேசிய தலைவர்களுடன் பேசும்போதும் சந்திப்பின்போதும் கனிமொழியை முன்னிலைப்படுத்தினார் ஸ்டாலின். இதனை சிவா தரப்பினர் விரும்பவில்லை. கனிமொழிக்கு எதாவது வகையில் செக் வைக்க வேண்டும் என நினைத்தனர்.

இதற்கு ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள சிலரும் தூபம் போட்டனர். கஜா புயல் பாதிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பேச விரும்பினார் கனிமொழி. ஆனால், சிவாவும் இந்த விவகாரம் தொடர்பாக தலைவர் என்ற முறையில் கனிமொழியிடம் கூறாமல் ஒப்புதல் வாங்கிவிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து மோதலில் கனிமொழியைப் பார்த்து சில வார்த்தைகளைக் கூறிவிட்டார் சிவா.

இதனால் நொந்து போன கனிமொழி, ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு போனார்.

அப்போது, தலைவர் மறைவுக்குப் பிறகு கனிமொழியை ஒதுக்கும் வேலைகளைச் சிலர் செய்கின்றனர். கட்சி நடத்தும் கூட்டங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் மற்றவர்களும் இதே வேலையைச் செய்கின்றனர். இதே நிலை நீடித்தால் வேறு மாதிரியான முடிவுகளை கனிமொழி எடுக்க வேண்டியது வரும் என ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர் கனிமொழி ஆதரவாளர்கள்.

இதன்பிறகே, சிவாவை அழைத்து டோஸ் விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

இந்த சம்பவம் பற்றிப் பேசும் திமுகவினர், கட்சிக்கு சிவா மட்டுமே ஏகபோகமான உரிமையைக் கொண்டாடுகிறார். சசிகலா புஷ்பா விவகாரத்தில் சிவா சிக்கியதன் பின்னணியில் 2 கோடி ரூபாய் பண விவகாரம் இருந்தது.

அப்போதே ஜெயலலிதாவைப் போல அதிரடி நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார் கருணாநிதி. அவரால் கனிமொழிக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பாதிப்புதான். கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் ஆ.ராசாவும் திருச்சி சிவாவும் இருக்கின்றனர். இவர்களுக்குக்கீழ் 300க்கும் மேற்பட்ட தலைமைக் கழக பேச்சாளர்கள் இருக்கிறார்கள்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு இந்தப் பேச்சாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லையாம். இந்தப் பேச்சாளர்கள் எல்லாம் ஒன்று திரண்டு சிவாவை சந்தித்துப் பேசியுள்ளனர். அண்ணே...எங்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து கலைஞர் வாழ்க எனக் கோஷமிட்டே பழகிவிட்டோம். அவர்தான் எங்கள் வாழ்க்கைக்கு உயிர்நாடியாக இருந்தார்.

அதனால அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தலாம்னு இருக்கோம். இதுக்காக எங்களுக்கு ஒத்தப் பைசா கூட தர வேணாம். மாநிலம் முழுக்க அஞ்சலி கூட்டங்களை நடத்தறோம். பயணத்துக்கான திட்டத்தை மட்டும் எழுதிக் கொடுங்க போதும்' எனக் கேட்டிருக்கிறார்கள்.

இதற்குப் பதில் சொன்ன சிவா, அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இப்ப நிறைய அஞ்சலி கூட்டம் நடத்தப்படுகிறது. உங்களுக்கு எப்ப நடத்தனும்னு சொல்றேன். அதுவரைக்கும் வேற வேலைகளைப் பாருங்க' எனக் கூறியிருக்கிறார்.

இப்போது வரையில் பேச்சாளர்களின் கோரிக்கைக்குப் பதில் வரவில்லை. ஆனால் வாரத்துக்கு 3 சினிமாக்களை பார்க்க மட்டும் அவர் தவறுவதில்லை. இலக்கியம் என்ற பெயரில் நிர்வாகிகளை எல்லாம் நோக வைத்துக் கொண்டிருக்கிறார் சிவா. அவருக்குக் கடிவாளம் போடாவிட்டால் வேறு கட்சிகளுக்குப் போகக் கூடியவர்களின் எண்ணிக்கை கூடிவிடும்' என்கின்றனர் உடன்பிறப்புகள்.

More News >>