கூட்டணி சேர ரூ500 கோடி கேட்ட அந்த அரசியல் கட்சி..ஷாக்கில் அதிமுக

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்துவருகிறது அதிமுக. அதன் ஒருகட்டமாக பாமகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 'தினகரன் வலைக்குள் பாமக போய்விடக் கூடாது என்ற பயமும் அதிமுகவுக்கு வந்துள்ளதாகச் சொல்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

அதிமுகவிலும் கோட்டையிலும் அதிகாரம்மிக்க தலைவராக உருவெடுத்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதன் ஒருபகுதியாக பன்னீர்செல்வத்தை பல வழிகளிலும் முடக்கிவிட்டார். ரகசிய சந்திப்பு விவரத்தை தினகரன் சொன்னதில் இருந்தே, ஓபிஎஸ்ஸின் முக்கியத்துவம் சுருங்கிவிட்டது. மத்திய நிதி மந்திரி ஜெட்லியைப் பார்ப்பதற்குக்கூட வேலுமணிதான் சென்றார். தமிழக நிதி மந்திரி என்ற முறையில் ஓபிஎஸ்ஸைப் புறக்கணித்துவிட்டனர்.

இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் இருக்க, தேர்தல் கூட்டணி வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு இளைஞர் பேரவையில் உ.தனியரசு மட்டுத்தான் அதிமுக அணியில் இருக்கிறார். அவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். தமிமுன் அன்சாரியில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியும் கருணாஸின் புலிப்படையும் அதிமுகவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

இந்த நிலையில், தேர்தலில் தனித்து விடப்பட்டிருக்கும் பாமகவோடு பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியுள்ளனர் அதிமுக பொறுப்பாளர்கள் சிலர். ஆறு எம்பி தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் எனப் பேச்சுவார்த்தைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக இல்லாமல் தனியாக மீண்டும் களத்தில் நின்றால் பாமகவுக்கு வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. போன முறை மோடி பிரதமர் எனக் கூறியதாலும் நாயக்கன் கொட்டாய் இளவரசன் விவகாரத்தாலும் அன்புமணியால் ஜெயிக்க முடிந்தது. இந்தமுறை தனியாக நின்றால் நிச்சயம் அன்புமணி டெபாசிட் வாங்க மாட்டார் என்பதால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் ராமதாஸ். இதன் பிறகு தீவிரமாக பரிசீலித்து அதிமுக கூட்டணி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

இதற்கிடையில், அதிமுக பொறுப்பாளர்களிடம் பேசிய ஓர் அரசியல் கட்சியின் தலைவர், 'உங்களோடு கூட்டணிக்கு வருகிறோம். தேர்தல் செலவுகளுக்காக 500 சி மட்டும் கொடுத்துவிடுங்கள். ராஜ்யசபா சீட்டும் வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்கள். தலைமையிடம் பேசிவிட்டு லைனில் வருகிறேன் எனப் பதில் கொடுத்திருக்கிறார்களாம்.

-அருள் திலீபன்

More News >>