அதிமுகவோடு இணையத் தயார்! பிஜேபியோடு டீல் பேசிய திவாகரன்

தேர்தல், கூட்டணி, பேச்சுவார்த்தைகள், திரைமறைவு பேரம் என தமிழக அரசியல் கட்சிகளின் தகுதிகளுக்கேற்ப டிமாண்டுகள் தொடங்கிவிட்டன. இந்த ஆட்டத்தில் பிஜேபியை சேர்த்துக் கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படிப்பட்ட ஒரு கட்சியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் திவாகரன்.

மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பிஜேபிக்கு இன்னும் 5 மாதங்களே அதிகாரம் இருக்கிறது. அதற்குள் தமிழ்நாட்டு அரசியலில் கால் ஊன்ற நினைக்கிறது. டிபென்ஸ் காரிடார், எய்ம்ஸ் உள்பட பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதில் ஏற்படும் காலதாமதங்களும் இழுத்தடிப்புகளும் யாருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தரவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மோடி. இணையத்தள பிரசாரமும் குஜராத் மாடலும் அவரைப் பதவியில் உட்கார வைத்தது.

ஆனால், இந்தமுறை மோடிக்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை எனக் கணிப்புகள் கூறுகின்றன. போதாக்குறைக்கு 5 மாநிலத் தேர்தலில் கிடைத்த தோல்வி, மோடி இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில்தான் நிதின் கட்கரியை ஆர்எஸ்எஸ் முன்னிறுத்துவதாக பேச்சு வந்தது. பிஜேபிக்குள்ளேயே இத்தனை குழப்பங்கள் நடந்தாலும், இணைப்பு மூலமாக தங்களையும் சேர்த்து வைப்பார் மோடி என நம்பிக் கொண்டிருக்கிறாராம் திவாகரன்.

அதிமுக, அமமுக இணைப்புக்காக டெல்லியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், அண்ணா திராவிடர் கழகத்தையும் அதிமுகவோடு இணைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என மோடி தரப்பிடம் தூது சென்றிருக்கிறார் திவாகரன். முதலில் கட்சிக்குள் நுழைய வேண்டும். பிறகு அதிகாரத்துக்குள் நுழைய வேண்டும் என்பதுதான் திவாகரனின் டார்கெட்.

அதிமுக இணைப்பு முயற்சிக்கு சசிகலா சம்மதம் தெரிவித்தாலும் தினகரன் ஒத்து வரப் போவதில்லை. 'அவர் அமமுகவாகவே இருப்பதுதான் எங்களுக்கும் நல்லது, சசிகலா எங்களோடு இருந்தால் போதும்' என நினைக்கிறாராம் திவாகரன். ஒருவேளை இணைப்பு முயற்சிகள் கைகூடினால் தங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் டெல்லிக்கு திவாகரன் சொல்லியிருக்கும் மெசேஜ் என்கிறார்கள் மன்னார்குடி கோஷ்டிகள்.

More News >>