ஐ.டி. துறையில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு: வல்லுநர் தகவல்

2019ம் ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏறக்குறைய ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய தேசிய பங்கு சந்தை இயக்குநர் மோகன் பாய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்தவர் மோகன் பாய். அவர் தற்போது மணிப்பால் குளோபல் எஜூகேஷன் சர்வீசஸ் மற்றும் ஆரின் கேபிட்டல் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் தேசிய பங்கு சந்தையின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

ஏழு ஆண்டுகளாக மென்பொருள் துறையின் ஆரம்ப கட்ட பணியாளர்களின் ஊதிய விகிதம் மிகவும் குறைவாக இருந்தது வந்தது. மென்பொருள் துறையில் ஏற்பட்டிருந்த தேக்கம் 2018ம் ஆண்டு மாற்றமடைந்து ஆரம்ப கட்ட ஊதிய விகிதத்தில் 20 விழுக்காடு உயர்வு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான ஹெச்1பி விசா பெறுவதற்கான நடவடிக்கைகளுக்கு 2018ம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆகவே இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன.

ஆரம்ப கட்ட பணியாளர்களுக்கான ஆண்டு ஊதியம் 4.5 முதல் 5 லட்சம் வரையாக தற்போது உயர்ந்துள்ளது. அது நல்ல அறிகுறி. 2018ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் ஏறக்குறைய 1.5 வேலைவாய்ப்புகளோடு 3.5 முதல் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் அளிக்கப்பட்டன. வரும் ஆண்டு புதிய நிறுவனங்களால் அளிக்கப்பட இருக்கும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளோடு 4.5 முதல் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று மோகன் பாய் தமது கணிப்பை கூறியுள்ளார்.

தற்போது ஸ்டார்ட்அப் என்னும் புதிய தொழில்முயற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 39,000 ஆக உள்ளது. ஒவ்வோராண்டும் ஏறக்குறைய 5,000 நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. எஞ்ஜினியர்கள் மட்டுமின்றி பிபிஓ என்னும் வணிக நடவடிக்கைகள் துறையிலும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.

More News >>