பொங்கல் பண்டிகைக்கு 24 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். மக்கள் பயணிப்பதற்காக, சிறப்பு பேருந்துகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில், சென்னையில் இருந்து மட்டும் 14,263 பேருந்துகள் இயக்கப்படும். தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு பேருந்து எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளுக்காக வரும் ஜனவரி 9ம் தேதி சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்படும். மேலும், சிறப்பு முன்பதிவு மையங்கள், விசாரணை மையங்கள் திறக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் போக்குவரத்து காவல்துறையினரின் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.