நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. கரூர் இணைப்பில் ஸ்டாலின் சூளுரை
அ.ம.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுக்கட்சியில் இருந்து தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையக்கூடிய விழா. மாபெரும் பொதுக்கூட்டம் என்று சொல்வதா? மாவட்ட மாநாடு என்றழைப்பதா? ஏன் அதையும் தாண்டி மாநில மாநாடு என்றழைப்பதா என்ற உணர்வோடு திரண்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தினுடைய தலைவர் கரூர் மாவட்டத்தினுடைய செயலாளர் நண்பர் நன்னியூர் ராஜேந்திரன் அவர்க்ளே, வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய தெற்கு நகரக் கழகச் செயலாளர் சுப்ரமணி அவர்களே, முன்னிலைப் பொறுப்பேற்று இந்த நிகழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என் இனிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களே, கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, திருச்சி மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு அவர்களே, கழக உயர் நிலை செயற்திட்டக்குழு உறுப்பினர் அண்ணன் கே.சி.பி அவர்களே, கழக விவசாய அணிச் செயலாளர் சின்னச்சாமி அவர்களே, முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களே, மு.பெ.சாமிநாதன் அவர்களே, நிறைவாக நன்றியுரை நல்கயிருக்கக்கூடிய மாவட்டப் பொருளாளர் கருப்பண்ணன் அவர்களே, மேடையில் வீற்றிருக்கக்கூடிய மாவட்டக் கழக நிர்வாகிகளே, கழகத்தின் முன்னோடிகளே, நம்முடைய அருமை சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை ஒப்படைத்துக்கொள்ள இங்கு வருகை தந்திருக்கக்கூடிய அன்புத் தோழர்களே, அருமைக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே, நண்பர்களே பெரும் திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே தாய்மார்களே, தோழமைக் கட்சியினைச் சர்ந்திருக்கக்கூடிய தோழர்களே ஈட்டி முனைகளாக மட்டுமல்ல இந்த நாட்டினுடைய திருப்பு முனைகளாகவும் காட்சியளிக்கக்கூடிய இளைய சமுதாயத்தினுடைய இனிய நண்பர்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரோடு உயிரான அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இப்படியே பேசாமல் ஒரு ஐந்து நிமிடம் உங்களுடைய முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கின்ற ஆசை இப்போது எனக்கு வந்திருக்கின்றது. காரணம் அந்தளவிற்கு உங்கள் முகத்திலே காணக்கூடிய உணர்ச்சி – எழுச்சி – ஆர்வம் – ஆரவாரம் - பூரிப்பு – புன்னகை – புலங்காகித உணர்வு இத்தனையும் ஒன்றாக சேர்த்து கூட்டிப்பார்க்கின்ற நேரத்தில், “நம்மை வெல்வார் இந்த நாட்டில் யாரும் இல்லை, எவரும் இல்லை, இனி எவனும் பிறக்கவும் முடியாது” என்ற அந்த உறுதியோடு, இந்த மேடையில் நின்றவாரு நான் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் இங்கே பேசுகின்ற நேரத்தில் ஒன்றை எடுத்துச் சொன்னார் இந்த கரூருக்கு நான் பலமுறை - பல்வேறு நிலைகளில் – பல்வேறு பொறுப்புக்களை ஏற்றவனாக வந்ததுண்டு. கழகத்தின் பேச்சாளனாக வந்திருக்கின்றேன். இளைஞரணியின் ஒரு அங்கமாக வந்திருக்கின்றேன்.
சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கின்றேன், சென்னை மாவட்டத்தின் மேயராக வந்திருக்கின்றேன், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக வந்திருக்கின்றேன் பொருளாளராக வந்திருக்கின்றேன். ஆட்சிப் பொறுப்பில் இருந்து பணியாற்றக்கூடிய உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்திருக்கின்றேன், துணை முதலமைச்சராக வந்திருக்கின்றேன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவனாக வந்திருக்கின்றேன். இப்பொழுது கழகத்தின் தலைவனாக இந்தக் கரூருக்கு வந்திருக்கின்றேன்.
நன்னியூர் ராஜேந்திரன் அத்தோடு நிறுத்தாமல் அடுத்தமுறை வருகின்ற போது எப்படி வரவேண்டும் என்று தன்னுடைய உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார்.நான் அதை விமர்சனம் செய்தோ அல்லது அது குறித்து கருத்துக்களை எடுத்துப் பேசவோ நான் விரும்பவில்லை. இருந்தாலும் ஒன்றை நான் குறிப்பிட விரும்புவது, என்னைப் பொறுத்தவரையில் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்ற நிலையில் தான் நான் இங்கு வந்திருக்கின்றேன்.
அந்த உணர்வோடு வந்திருக்கக்கூடிய நிலையில் இந்த நேரத்தில் நம்முடைய அன்பிற்கினிய அருமை சகோதரர் செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் அவர் ஏற்கனவே, சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முறையாக உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருந்தாலும் இணைத்துக் கொண்டிருந்தாலும் இந்த மாவட்டத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றிடக்கூடிய அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடிய நண்பர்களை, தோழர்களை, சகோதரிகளை, சகோதரர்களை எல்லாம் ஏறக்குறைய 30,425 பேர்களை, பல்வேறு கட்சிகளிலிருந்து அவர்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகமாம் நம்முடைய தாய்க்கழகத்தில் வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.
எனவே, நம்முடைய இனிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களையும் அவரோடு கழகத்தில் இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான தோழர்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். ஏன், இரண்டு கரங்களையும் விரித்து அன்போடு அரவணைத்து வருக வருக வருக என என் வரவேற்கிறேன்.ஒரு கட்சியில் இருந்து நம்முடைய கழகத்துக்கு வருகிறீர்கள் என்று உங்களை நான் பார்க்கவில்லை. ஏற்கனவே, இருந்த கழகத்துக்கே நீங்கள் மீண்டும் வந்திருக்கிறீர்கள். தாய் தந்தையரை விட்டுப் பிள்ளைகள் பிரியலாம், என்றாவது ஒருநாள் பிள்ளை வீடு திரும்பும் என்று பெற்றோர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். பெற்றோர்களுக்கு எப்போதும் அந்த நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையோடு தான் நாங்களும் இருந்தோம். அப்படி பெற்றோர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் நல்லப் பிள்ளைகளாக நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
யாருடைய இயக்கத்திற்கு வந்திருக்கின்றீர்கள் தெரியுமா? ஈராயிரம் ஆண்டுகள் நம்முடைய அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன் – சிங்க நடையும் – சிங்கார தெள்ள நடையும், பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும் – தன்னுடைய உரை நடையால் கண்ட கோமான்; தம்பிமார் படைமீது விழிநோக்கி வெற்றி கண்ட கோமான்; பூமிப் பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் இதயமெல்லாம் தங்க சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் நம்முடைய இதய மன்னன் நம்மை ஆளாக்கிய ஒப்பற்றத் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.அண்ணா அவர்கள் சொன்னார். ஒரே தாய் வயிற்றில் பிறக்க அந்த தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த தம்பிமார்களே என்றாரே பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அவரால் உருவாக்கப்பபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீர்கள். இறையருள் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, உடையவள் புது அழகே அன்பே அமுதே அழகே இனிதே இன்பமே இனியத் தென்றலே கவியே கனியே பழரசச்சுவையே மரகத மணியே மாணிக்கச் சுடரே மங்கல விளக்கே என்று அழைத்து பாராட்டிப் புகழ்ந்தாரே, "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று கழகத் தோழர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் பேரியக்கமான தாய்க் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீங்கள் மீண்டும் இணைந்துள்ளீர்கள்.மேடையிலே நாங்கள் அமர்ந்திருக்கின்ற நேரத்தில் நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள், என்னிடத்திலே சில செய்திகளைச் சொன்னார். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தார். இல்லை, இல்லை, நெருங்கி வந்து விட்டீர்கள், நாற்காலியை பக்கத்தில் போட்டு அருகில் நெருக்கமாக வந்து உட்காருங்கள் என்று சொன்னேன்.எதற்காக சொல்லுகிறேன் எனச் சொன்னால், தாய்க் கழகத்தில் இணைவதில் உங்களுக்கு தயக்கம் தேவையில்லை. தாய்க்கழகத்தில் செயல்படுவதில் கூச்சம் தேவையில்லை. அவரே சொன்னார், பணியாற்ற வேண்டும், உறுதியெடுக்க வேண்டுமென, நான் வரவேற்கிறேன். எனவே, செந்தில் பாலாஜியும் அவரின் தலைமையில் வந்திருக்கும் இளைஞர்களையும், சகோதர சகோதரிகளையும் காண்கிறேன். நீங்கள் உற்சாகமாகச் செயல்படுங்கள்.இங்கு இன்னொன்றையும் காண்கிறேன். எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டத்தை காண்கிறேன். அதுவும் இன்முகத்துடன் வந்திருக்கும் இளைஞர்களை காண்கிறேன்.
ஈட்டி முனைகளாக மட்டுமல்ல நாட்டின் திருப்புமுனைகளாக இருக்கும் இளைஞர்களின் முகத்தில் ஒரு எழுச்சியை நான் காண்கிறேன். இந்த இளைஞர் கூட்டத்தைப் பார்க்கிறபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை சொன்னார்.வெட்டிப் பேச்சை தட்டி நடக்கும் தீரம். வீணரின் கொட்டத்தை அடக்கிடும் வீரம். ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அநீதியைக் கண்டால் கொதித்தெழும் பண்பு - இதுதான் இளைஞர் பருவம் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு இனிமேல் தான் அதிகமான வேலைகள் காத்திருக்கிறது. வேலை அதிகமான நேரத்தில் மிகச் சரியான நேரத்தில் நீங்கள் சேர்ந்துள்ளீர்கள்., உழையுங்கள்.
உழைப்புக்கான பலனை உரிய நேரத்தில் உரிய முறையில் நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை, உறுதியை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.அதிகமான வேலைகள் என்று நான் சொன்னது தேர்தல் வேலைகளைத்தான். சொன்னார்களே, நாடாளுமன்றத் தேர்தல் விரைவிலே வரப் போகிறது. அத்தோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வந்தாலும் வரலாம். அல்லது அந்த தேர்தல் வருவதற்கு முன்பு 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கப் போகிறதா? அல்லது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவார்களா? நடத்த மாட்டார்களா? என்கிற கேள்வி ஒரு பக்கம். எனவே, இந்த ஜனநாயகப் போர்க்களத்தில் தான் வேலைகள் நிறைய இருக்கிறது என்று சொன்னேன். வேறல்ல. வேலை என்றால் அதற்கான பலனான வெற்றியும் நமக்குக் கிடைக்கத்தான் போகிறது. அது உறுதி உறுதி உறுதி.
அண்மையில் நடந்து முடிந்திருக்கும் தேர்தல். நான்கு மாநில தேர்தல். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் இன்றைய பிரதமர் நரேந்திரமோடி நிச்சயம் தோற்றுப்போவார் என்பதற்கு அடையாளமாக அந்தத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறதா இல்லையா? அதேபோல் தான் இந்த மாநிலத்தில் இருக்கும் ஆளும் அ.தி.மு.கவும் வர இருக்கும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது. அந்தத் தேர்தலில் நிச்சயம் திமுகதான் வெல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது.எனவே மிக முக்கியமான நேரத்தில் நீங்கள் அனைவரும் திமுகவில் இணைந்துள்ளீர்கள். மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கமும் மாநிலத்தில் இருக்கும் எடப்பாடி அரசாங்கமும் ஆள்வதற்கு தகுதியில்லாதவையாக இருக்கிறது என்று உணர்ந்ததால் தான் நீங்கள் அனைவரும் உங்களை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்.
ஒரு திரைப்படத்திலே வசனம் வரும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவது என்று, தாமதமாக வந்திருந்தாலும் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளீர்கள்.இங்கே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்யாத்துரை, சேகர் ரெட்டி போன்ற ஒரு சிலரை திருப்தி படுத்தினால் போதும். அதேபோல மத்தியில் ஆளும் பிரதமர் மக்களை பற்றிய கவலையே இல்லாதவராக இருக்கிறார். நரேந்திர மோடிக்கு சில கார்ப்பரேட் கம்பெணிகளை திருப்திபடுத்தினால் போதும். இந்தியாவை பற்றியே கவலைப்படாமல் உலகம் சுற்றிக் கொண்டிருந்தால் போதும்.
இப்படிப்பட்ட இரண்டு விதமான பிறவிகளை வீட்டுக்கு அனுப்புவது தான் நாம் எதிர்கொள்ள இருக்கும் ஜனநாயகப் போர்க்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.பிஜேபியின் கோட்டை என்று சொல்லப்படும் மாநிலங்களிலேயே ஓட்டை விழுந்திருக்கிறது. அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டது. இது நரேந்திர மோடி எதிர்பாராத அரசியல் திருப்பம். அவரே திடுக்கிட்ட திருப்பம். அதனால் தான் காங்கிரஸ் கட்சியின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் விமர்சன அம்புகளை நரேந்திர மோடி வீச துவங்கியிருக்கிறார். கேட்கிறார், திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணியா என்று, நான் கேட்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்த ஓராண்டு காலத்தில் அ.தி.மு.க வை உடைத்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என்று இரண்டாக பிரித்து, அதற்குப் பிறகு கட்டப்பஞ்சாயத்து நடத்துவதைப் போல இரண்டு பேரையும் உட்கார வைத்து கைகோர்த்து சேர்த்து, கட்டப்பஞ்சாயத்து வேலையையா பிரதமர் செய்ய வேண்டும்? நான் கேட்கிறேன், இந்தியப் பிரதமர் பார்க்க வேண்டிய வேலையா இது? ஒரு அரசியல் ப்ரோக்கர் செய்ய வேண்டிய வேலை.அண்மையில் பெரம்பலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டுச் சொன்னேன். தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்த ஆட்சியில் இருக்கும் அமைச்சரவையை தனிப்பட்ட முறையில் சொல்வதை விட ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் அந்த அமைச்சரவை ஒரு ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டினேன். அப்படி சொன்னதற்கு வழக்கு போடுவார்கள் என காத்திருந்தேன். ஆனால் இதுவரை வழக்கு போடவில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம், ஸ்டாலின் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார். அதனால் வழக்குப் போட முடியாது என அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. என்ன காரணம்? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது டெண்டர் வழக்கு, சிபிஐ விசாரணையில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆலந்தூர் பாரதி அவர்கள் வழக்குப் போட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அதை விசாரித்து விட்டு, முதலமைச்சர் டெண்டரிலே ஊழல் செய்திருப்பதில் முகாந்திரம் இருக்கிறது.
எனவே நாங்கள் விசாரிக்க முடியாது. அதனால், சிபிஐ விசாரணை நடத்திட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கடுத்த நொடியே பதறிப்போய் எடப்பாடி டெல்லிக்கு ஓடினார். உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். அது ஒரு பக்கம்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செலவ்ம் மீது இருக்கிறது. அமைச்சர் வேலுமணி மீது டெண்டர் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கமணி மீது ஊழல் புகார் தரப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கிறாரே, (கைதட்டல்) இதை விட்டு விட்டால் உங்களுக்கு அதிகம் கோபம் வரும். அவரைப் பற்றி நான் சொல்லவில்லை ஒரு பிரபலமான ஆங்கிலப் பத்திரிக்கை TIMES OF INDIA-வில் ஆதாரத்தோடு எடுத்து வெளியிட்டிருந்தார்களே 2000 பேருந்துகள் வாங்கியதில் 300 கோடி ரூபாய் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக TIMES OF INDIA என்கின்ற ஆங்கில ஏடு சுட்டிக் காட்டியிருக்கின்றது.
அமைச்சராக இருக்கக்கூடிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய கார் நிறுவனங்களுக்காக டெண்டர் விதிகளெல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றது. டெண்டர் கொடுத்த கார் நிறுவனத்தை டெண்டர் கொடுக்கும் முன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை. டெண்டர் பிரிக்கப்படும் போதும் அழைக்கவில்லை. இதை ஏதோ வாய் புளித்ததோ – மாங்காய் புளித்ததோ என்று பேசவில்லை. ஆதாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தான் பேசுகின்றேன். நான் கலைஞருடைய மகன் எதையும் போகின்ற போக்கில் பேசிக்கொண்டு போக மாட்டேன். 2000 பேருந்துகள் வாங்கியதில் 300 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கின்றது என்று பத்திரிக்கைகள் குற்றம் சாட்டியிருக்கக்கூடிய அமைச்சர் தான் இன்றைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் அவர்கள். இந்த மாவட்டத்தில் இந்த விஜயபாஸ்கர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னொரு விஜயபாஸ்கர்.
குட்கா புகழ். சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் அவர் ராஜினாமா செய்யக்கூடிய உணர்வை பெற்றிருக்கிறாரா? இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 9 அமைச்சர்களின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஆர்.கே நகரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த 89 கோடி ரூபாயை பிரித்த வழக்கில் எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உள்ளது. இன்னும் முட்டை ஊழல், பருப்பு ஊழல், நிலக்கரி ஊழல், மின் விளக்கு ஊழல் என பல்வேறு ஊழல் புகார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது உள்ளது. அதனால் தான் நான் சொன்னேன், இது கிரிமினல் கேபினட் – கிரிமினல் கேபினட்.இவ்வளவு குற்றம் செய்தவர்களை, இவ்வளவு குற்றம் செய்து கொண்டிருப்பவர்களை இன்னும் பல குற்றங்களை செய்யப் போகிறவர்களை காப்பாற்றிக் கொண்டிருப்பது யார், இந்த கிரிமினல் கேபினெட்டை காப்பாற்றிக் கொண்டிருப்பது யார்?நான் கேட்கிறேன் இது என்ன பெரும்பான்மை கொண்ட மாநில அரசா, பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட ஆட்சியா? இல்லை.18 எம்.எல்.ஏக்களின் பதவிகளை சர்வாதிகாரமாக சபாநாயகர் பறித்தார். இது ஒரு பக்கம்.இன்னொரு பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு. இதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னால் என்ன ஆகுமென்று தெரியவில்லை. இன்றைக்கு 103 உறுப்பினர்களின் ஆதரவோடும் மைனாரிட்டி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.மெஜாரிட்டிக்கு 117 பேர் ஆதரவு தேவை. ஆனால், இன்றைக்கு இருப்பதோ 103 பேர் அதன் பிறகும், அவர் தைரியமாக வலம் வருகிறார் என்றால் மோடி இருக்கும் தைரியத்தில் தான் எடப்பாடி இருக்கிறார். எடப்பாடியை காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் மோடிக்கு ஏன் வருகிறது. தமிழ்நாட்டில் பிஜேபி என்கிற ஒரு கட்சியே இல்லை.
எடப்பாடியை மிரட்டுவதன் மூலமாக அதிமுகவுடன் சேர்ந்து ஒருசில தொகுதிகளையாவது கைப்பற்றி விடலாம் என்ற நப்பாசையில் நரேந்திர மோடி இருக்கிறார். அதனால் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியை பார்த்து மோடி அச்சப்படுகிறார், பயப்படுகிறார்.நான் ஏற்கனவே சொன்னேன். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயிருக்கிறது என்றும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் 50 ஆண்டுகள் இந்தியா பின்னோக்கி போய்விடும் என்றும் நான் சொன்னேன். என்னை விமர்சிப்பவர்கள் நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்த சாதனை என்பதை பட்டியலிடட்டும். மோடி செய்த ஒரே சாதனை ஐந்தாண்டு காலத்தில் அதிக முறை வெளிநாடு சென்ற பிரதமர் என்பது மட்டும் தான்.இந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் விரல்விட்டு சொல்லக்கூடிய ஒரு சாதனையை கூட மோடியினுடைய அரசாங்கம் செய்யவில்லை. மோடியிடமிருந்து சலுகைகளை உதவிகளை நலத்திட்டங்களை கேட்டுப்பெறுவதற்கான துணிச்சலோ யோக்கியமோ தைரியமோ, துணிச்சலோ இல்லாததாக இன்றைய எடாப்பாடியினுடைய அரசு இருக்கிறது.பன்றிக்காய்ச்சலில் இந்திய அளவில் ஆறாவது இடம் தமிழகம் என்பது தான் எடப்பாடி அரசாங்கத்தின் சாதனை. சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் என்பதுதான் எடப்பாடி அரசாங்கத்தின் ஒரே சாதனை. 14 பேரை தூத்துக்குடியில் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றது தான் எடப்பாடி அரசாங்கத்தின் ஒரே சாதனை.
மோடியாவது தன்னை இந்த நாட்டின் மன்னராகத்தான் நினைத்துக் கொள்கிறார். ஆனால், இந்த எடப்பாடி பழனிசாமி தன்னை கடவுளாகவே நினைத்து ஒரு அவதரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் சினிமா தியேட்டருக்குப் போனால் பார்த்திருப்பீர்கள். மக்கள் வரிப்பணத்தில் அரசாங்கத்தின் சார்பில் எடுக்கப்படும் விளம்பரத்தில் யாருக்கு அர்ச்சனை செய்வது என்று அர்சகர் கேட்க ‘நம்ம எடப்பாடி சாமிக்குதான்’ என்று வசனம் வைக்கிறார்கள் என்றால் முதலமைச்சர் தன்னை தன் மனதுக்குளேயே ஒரு கோவில் கட்டிக்கொண்டு சாமியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.கஜா புயலால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு 65 பேர் இறந்து பல்லாயிரக்கணக்கானோர் வீடு வாசல் இழந்து லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து டெல்டா மாவட்டத்தின் விவசாயமே அழிந்து போன பிறகும், அந்த இடத்தை போய் பார்ப்பதற்கு கூட இறக்கமில்லாமல் இருந்த இவரெல்லாம் மக்களை காப்பற்றுகிற சாமியல்ல.. மக்களை ஏமாற்றும் ஆசாமி தான் இந்த எடப்பாடி பழனிசாமி.முதலமைச்சர் எங்கே எங்கே? என அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் கேட்கிரார்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதற்கு பிறகும் மக்களை போய் பார்ப்பதற்கு பயந்து ஹெலிகாப்டரில் சில மணி நேரம் வானத்தை சுற்றிவிட்டு வந்தார் முதலமைச்சர். எந்த அமைச்சரும் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு போக முடியவில்லை. ஒரு அமைச்சர் காரை விட்டுவிட்டு, இதோ நீங்களே சொல்கிறீர்கள் ஓ.எஸ்.மணியன். அவர் தன்னுடைய காரை விட்டு விட்டு சுவர் ஏறி குதித்து திருடன் போல பைக்கில் தப்பினார். இது தான் தமிழ்நாட்டில் அதிமுகவின் இன்றைய நிலைமை.நான் இன்றைக்குச் சொல்கிறேன். டெல்டா பகுதிகளில் மட்டுமல்ல, வர இருக்ககூடிய தேர்தலில் பி.ஜே.பி யும், அதிமுக வும் ஓட்டுக் கேட்கக் கூட நீங்கள் வர முடியாது. ஓட ஓட விரட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். இதுதான் உண்மை.புயல் பாதித்து இத்தனை நாட்கள் ஆனபிறகும் இன்னமும் நிவாரணப் பணிகள் போய் சேரவில்லை. மக்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பவில்லை. மத்திய அரசாங்கம் இன்னும் உதவி பணத்தை வழங்கவில்லை. இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்று அறிக்கையை கூட இந்த அரசு கொடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அலட்சியத்துக்கு ஒரே ஒரு உதாரணம் காட்டவேண்டுமென்றால் கஜா புயல் பாதிப்பைதான் சொல்ல வேண்டும். உள்ளாட்சி தேர்தலை ஒழுங்காக நடத்தியிருந்தால், உள்ளாட்சி அமைப்புகள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் கஜா புயல் பாதிப்புகளை ஓரளவு தடுத்திருக்க முடியும், பாதிக்கப்பட்ட மக்களுக்காவது ஓரளவு உதவிகளை செய்திருக்க முடியும், மக்கள் பிரதிநிதிகள் இருந்து மக்கள் கவலைகளையாவது கேட்டிருப்பார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுவிடும் என்ற அரசியல் உள்நோக்கத்தோடு தேர்தலையே நடத்தாமல் செய்துவிட்டார்கள்.எதிலுமே ஆக்கப்பூர்வமான செயலை செய்வதற்கான ஆர்வமோ அறிவோ சிந்தனையோ எடப்பாடி அரசுக்கு இருந்ததில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென சொன்னால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இன்னொரு பக்கம் மிகப்பெரிய அளவில் சட்டப் போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. அமைதி வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தவர்களை அராஜகமாக துப்பாக்கி சூடு நடத்தி 14 பேரை சுட்டுக் கொன்றது எடப்பாடி அரசு. இதனால் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பை அடக்குவதற்காக ஆலையை மூடுகிறோம் என்ற ஒரு நாடகத்தை எடப்பாடி அரசு நடத்தியது. அப்பொழுதும் நான் சொன்னேன், மக்கள் மன்றத்திலும் சரி, சட்டமன்றத்திலும் சரி நான் சொன்னேன். அமைச்சரவைக் கூடி கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடுங்கள் அல்லது சட்டசபையில் தீர்மானம் கொண்டு வாருங்கள். அப்போதுதான் ஆலையை நிரந்தரமாக மூட முடியும் என்று நான் சொன்னேன்.
எல்லாக் கட்சித் தலைவர்களும் கூட சொன்னார்கள். கேட்டார்களா என்றால் இல்லை.ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒரு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடும் உத்தரவை போட்டார்கள். இன்றைக்கு பசுமை தீர்ப்பாயம் அதனை நிராகரித்துவிட்டது. என்ன சொல்லி நிராகரித்து இருக்கிறது தெரியுமா? ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றி மாநில அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று கூறி நிராகரித்து இருக்கிறது. ஆலையை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் என்று சொல்லிவிட்டது. இது எடப்பாடி அரசாங்கத்தின் கையாளாகாத தனத்தைத் தான் காட்டுகிறது. அன்றே அமைச்சரவைக் கூடி முடிவெடுத்திருந்தால் இந்த உத்தரவு வந்திருக்குமா? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற எண்ணமில்லை.
ஆலையை செயல்பட வைக்க மத்திய அரசு திட்டம். அதற்கு பேரம், அதற்கு மாநிலத்தில் உள்ள முதலமைச்சரும் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறாரே தவிர இவர்களின் உண்மையான நோக்கம் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதுதான்.இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடங்குவதற்கான அனுமதியை வழங்குவதற்காக தமிழக அமைச்சரவை கூட்டினார்கள். 34 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு வெறுவார்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். அதைக் கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கேட்கிறேன், அதிமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எத்தனை வேலைவாய்ப்புகள், எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன? எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது என்று புள்ளி விவரத்தோடு எடப்பாடி பழனிசாமியால் வெள்ளை அறிக்கை வைக்க முடியுமா?, விரைவில் கூடும் சட்டமன்றத்தில் அந்த வெள்ளை அறிக்கையை வைக்க முடியுமா?. அரசு தயாராக இருக்கிறதா? எல்லாமே வெற்று அறிவிப்புகள்…
கிராமத்தில் இரு பழமொழி சொல்வார்கள். சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா என்று. சர்க்கரை என்று எழுதி பார்த்தால் இனிக்கும் என்று நினைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு அறிவிப்பு. தமிழ்நாட்டில் தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்போவதாக முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே இவர்கள் நடத்திய தொழில் முனைவோர் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவித்தார்கள். 2.42 லட்சம் கோடி முதலீட்டில் புதிய நிறுவனங்கள் வரப்போவதாக அறிவித்தார்கள். இன்றுவரை அந்த 2.42 லட்சம் கோடி முதலீடு என்ன ஆச்சு? எத்தனை கோடி முதலீடுகள் வந்தது? இந்த லட்சணத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தப் போகிறார்களாம்.இதைவிட இன்னொரு வேடிக்கை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை பேசும் போது சொன்னார்.
நான் இந்த நாட்டுக்காக பலமுறை சிறை சென்றவன் என்று. எந்த நாட்டுக்காக எந்தச் சிறையில் இருந்தார்?உண்மையில் சிறைக்குத் தான் போகப் போகிறீர்கள். நம்முடைய செந்தில் பாலாஜி சொன்னதுபோல, ஆட்சி மாற்றம் வந்த அடுத்த நாள் அல்ல, அடுத்த வினாடியே சிறைக்குச் செல்வார்கள்.அதேபோல, “நானும் விவசாயி” என்று எடப்பாடி பழனிசாமி அடிக்கடிச் சொல்கிறார். அரசுப் பணத்தை கொள்ளையடிப்பதில் வில்லாதி வில்லன் யார் என்றால் இந்த எடப்பாடி பழனிசாமி. விவசாயி விவசாயி என சொல்லுகிறீர்களே, "விவசாயக் கடன்களை” தள்ளுபடி செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடையுத்தரவு வாங்கினார். இவரா விவசாயி? நான் கேட்கிறேன்.இந்த விவசாயிதான் கதிராமங்கலத்தில் விவசாயிகளுக்காக போராடியவர்கள் மீது தடியடி பிரயோகத்தை நடத்தி கூண்டோடு கைது செய்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு போட்டு கைது செய்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி.
இந்த விவசாயிதான் விவசாயிகளின் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.இப்போது 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்வதும் கொடுமை செய்வதும் இதே விவசாயி எடப்பாடி பழனிச்சாமிதான்.‘பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கப்பா, போக்கத்த பசங்களா”நான் கேட்கிறேன். இந்த பொய்யை நீண்ட நாட்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு போகக்கூடிய நாள் வெகுதூரம் அல்ல. வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும், 20 தொகுதிக்கான உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றிப்பெற போகிறது.எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி விரைவில் வீட்டிற்கு போகப்போகிறது. ஜனநாயகப் போருக்கு தான் நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இதற்கு கைக்கொடுக்க வந்த செந்தில் பாலாஜி மற்றும் தொண்டர்களையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.
இந்த ஜனநாயகப் போர் நரேந்திர மோடியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய போராகும்.நாடும் நமதே.. நாற்பதும் நமதே..இவ்வாறு அவர் பேசினார்.