இந்தியா முழுவதும் தனியாக காரில் பயணம் செய்யும் கோவை சங்கீதா - மியான்மர் எல்லையில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
கோவையைச் சேர்ந்த 51 வயது பெண்மணி சங்கீதா ஸ்ரீதர். அரபு நாடான அபுதாபியில் அந்நாட்டு அரசுத் துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மகாத்மா காந்தியில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தாய்நாட்டுக்கு தன்னாலான சேவை செய்யும் எண்ணம் உள்ளவர்.
தூய்மை இந்தியா திட்டத்தில் நமது நாட்டில் சுத்தம், சுகாதாரம் பற்றி அறியும் வகையில் நாடு முழுவதும் காரில் தன்னந்தனியாக சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி மும்பை இந்தியா கேட்டில் தொடங்கிய இவரது 29,000 கி.மீ.தூரப்பயணம் 29 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களின் வழியாக செல்கிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மத்தியில் மீண்டும் மும்பை இந்தியா கேட்டில் பயணத்தை நிறைவு செய்கிறார். வழி நெடுகிலும் இந்தியாவின் கிராமங்களில் கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்ந்து தூய்மை இந்தியா திட்டம், இந்திய சுற்றுலா அமைச்சகம், உலக சுகாதார நிறுவனத்திடம் அறிக்கை அளிக்க உள்ளார்.
சங்கீதாவின் கார் பயணம் மணிப்பூர் மாநிலத்தில் இந்திய - மியான்மர் எல்லையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே என்ற நகரத்தை வந்தடைந்த போது அங்குள்ள தமிழர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். சங்கீதாவை அங்குள்ள தமிழ்ச் சங்கத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று கவுரவித்தனர்.
தமிழ்ச் சங்கத்தில் திரண்டிருந்த தமிழர்களிடையே சங்கீதா உரையாடினார். பின்னர் தமிழர்கள் கட்டியுள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலிலும் சங்கீதா வழிபாடு நடத்திவிட்டு கார் பயணத்தை தொடர்ந்தார். அவரை தமிழர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.