விஜயபாஸ்கரும் ராமமோகன ராவும் கூட்டு! வெளிச்சத்துக்கு வந்த ஜி.ஹெச் மோசடிகள்
சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியது விஜயபாஸ்கரும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவும்தான் என்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
விருதுநகர், சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள், அவருக்கு ரத்தக் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை வாங்கி செலுத்தினர்.
சில நாட்கள் கழித்து அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார் அந்தப் பெண்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக, நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது.
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் பற்றிப் பேசும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள், ' தமிழக அமைச்சரவையில் ஐந்தாண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக நீடித்து வருகிறார் விஜயபாஸ்கர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் போயஸ் கார்டனில் செல்வாக்குடன் இருந்தார் ராமமோகன ராவ். கோட்டையிலும் ராமமோகன ராவ் வைத்ததுதான் அதிகாரம்.
அவரைவிட சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு சீஃப் செக்ரட்டரியாக பதவி உயர்வு பெற்றார். ஆனால், இந்த அதிகாரம் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு மத்திய வருமானவரித்துறையிலும் சிக்கினார். தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தி அதிர்ச்சி கொடுத்தனர்.
அந்தநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், ராமமோகன ராவின் மகன் பெயரும் அடிபட்டது. அனைத்து ஜி.ஹெச்சுகளிலும் பல்லாயிரக்கணக்கான தற்காலிக பணியாளர்களை மேக்ஸ் வெல் என்ற கம்பெனி மூலமாக நிரப்பினர். இந்தக் கம்பெனியில் விஜயபாஸ்கரும் ஒரு பார்ட்னர்.
இப்போது கர்ப்பிணி பெண் விவகாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மூவரில் 2 பேர் தற்காலிக பணியாளர்கள். தகுதியில்லாத பலரை வேலையில் அமர்த்தியது இந்த நிறுவனம்தான். கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தை அலட்சியமாகப் பார்க்காமல் இதன் அடிவேர் வரையில் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்' என்கிறார்கள்.