லோக்சபா தேர்தல் கூட்டணி: பாஜகவை எகிறி அடித்த எடப்பாடி!
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டும் ‘கறார்’ நிபந்தனைகள் பாஜகவை அதிர்ச்சிய அடைய வைத்துள்ளதாம்.
லோக்சபா தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பகீரத முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாஜகவை பொறுத்தவரையில் தினகரனின் அமமுகவை அதிமுகவுடன் இணைத்துவிட முயற்சிக்கிறது. அப்படி செய்தால் அதிமுகவின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு.
இது தொடர்பாக அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து பேசியிருந்தார். பாஜகவின் இத்தனை முயற்சிகளுக்கும் முதல்வர் எடப்பாடி தரப்பில் ’கறாராக’ சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளனவாம்.
தினகரனை மீண்டும் அதிமுகவில் ஒருபோதும் சேர்க்கவே மாட்டோம்; அப்படி சேர்க்க வேண்டும் என எங்களுக்கு நெருக்கடி தர கூடாது; தினகரனை சேர்த்தால் ஒட்டுமொத்த அதிமுகவும் மன்னார்குடி குடும்பத்தின் பிடியில் சிக்கிவிடும்; அதனால் அதிமுகவுக்கு மட்டுமல்ல பாஜகவுக்கும் மரண அடிதான் கிடைக்கும் என தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அத்தனை தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கும் தரப்படும். இதில் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
இப்படி கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டும் கெத்தை எப்படி உடைப்பது என பாஜகவில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
-எழில் பிரதீபன்