அமெரிக்காவில் கேப்டன் எப்படி இருக்கிறார் தெரியுமா ?
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ட்விட்டரில் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சிப் பணிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் அமெரிக்காவில் அவ்வபோது சிகிச்சையும் பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்ற விஜயகாந்த் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். அப்போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன்பிறகு, வீட்டில் ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்திற்கு மீண்டும் உடல்நலம் குறைவு ஏற்பட்டது. இதனால், 2ம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு, ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சிலருடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் கம்பீரமாக சிரித்தபடி போஸ் கொடுக்கும் விஜயகாந்தை கண்டு அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பரவிய வதந்திக்கு இந்த புகைப்படங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.