மக்களவையில் மத்திய அரசை வெளுத்து வாங்கிய அன்வர் ராஜா - அதிமுக மீது பா.ஜ.க மேலிடம் கடுங்கோபம்

முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி.அன்வர் ராஜா மத்திய அரசு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழந்து விட்டதாக காரசாரமாக பேசியது பா.ஜ.க.வை எரிச்சலடையச் செய்துள்ளது.

அன்வரின் கருத்து அதிமுகவின் கருத்தா? என பா.ஜ.க மேலிடம் சாட்டையைச் சுழற்றியதில் எடப்பாடி ஆடிப்போயுள்ளாராம். கடந்த வியாழனன்று முத்தலாக் மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் காரசாரமாக நடந்தது. விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி., அன்வர் ராஜா, இந்தச் சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது என்று ஆவேசமானார்.

அத்துடன் மத்திய பா.ஜ.க அரசை ஏகத்துக்கும் விமர்சித்தார். பண மதிப்பிழப்பால் கிராமப்புற மக்களின் கோபத்துக்கு ஆளானீர்கள்.ஜி.எஸ்.டி.யால் நகர்ப்புற மக்களை வாட்டி வதைத்தீர்கள், பெட்ரோல், டீசல் உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவால் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை இழந்தீர்கள். ஒட்டு மொத்த மக்களின் எண்ண பிரதிபலிப்பு தான் 3 மாநில தேர்தலில் பா.ஜ.க வின் தோல்வி என பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அன்வர் ராஜாவின் இந்தப் பேச்சு பா.ஜ.க மேலிடத் தலைவர்களை உஷ்ணப்படுத்திவிட்டது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தில் அதிமுகவை கூட்டணியில் வளைத்துப் போட பா.ஜ.க பல அஸ்திரங்களை பயன்படுத்தி வருகிறது. டெல்லியில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை வரவழைத்து கூட்டணி தொடர்பாக பா.ஜ.க மேலிடம் ரகசிய பேச்சு நடத்திய அதே நாளில் தான் அன்வர் ராஜாவின் பேச்சும் அமைந்ததால் பா.ஜ.க தலைவர்கள் கோபமடைந்துள்ளனர். அன்வர் ராஜாவை தூண்டி விட்டதின் பின்னணியில் தம்பித்துரை இருக்கலாம் என்றும் பா.ஜ.க. தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் சமீப காலமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி கூடாது என்ற நிலைப்பாட்டில் தம்பித்துரை பகிரங்கமாக பேசி வருவது தான்.

இதனால் அன்வர் ராஜாவின் பேச்சுக்கு என்ன அர்த்தம்! அதிமுகவின் கருத்தும் இதுதானா? என டெல்லியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுக்க ஆடிப்போயுள்ளாராம். இதனால் அன்வர் ராஜா தான் கூறியதை, தன் சொந்தக் கருத்து என கூறுமாறு எடப்பாடி உத்தரவிட்டுள்ளாராம். மக்களவை அதிமுக குழுத் தலைவர் வேணுகோபால் மூலம் அன்வர் ராஜாவுக்கு இந்த உத்தரவு பறந்துள்ளது. ஆனாலும் அன்வர் ராஜா இதற்கு சம்மதிக்க வல்லையாம். எனவே பா.ஜ.க.வை சமாதானப்படுத்த அன்வர் ராஜா மீதே எந்த நேரத்திலும் அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி மேற்கொள்வார் என்ற தகவல் அதிமுக மேலிட வட்டாரத்தில் பரபரத்து கிடக்கிறது.

More News >>