மதுரை அருகே அதிமுக கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது சரமாரி தாக்குதல் - அமைச்சர் உதயக்குமார் அன்பளிப்பு கொடுத்ததை படம் பிடித்ததால் ஆத்திரம்!

மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அன்பளிப்புகளை வாரி வழங்சினார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களை போலீசாரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் தொகுதி திருமங்கலம். அதிமுகவிலிருந்து பிரிந்து அ.ம.மு .க உருவானதால் இத் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்களே அதிகம். இதனால் தொகுதியில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பணம் மற்றும் அன்பளிப்புகள் என வாரியிறைத்து வருகிறார். அடிக்கடி சைக்கிள் ஊர்வலங்களை நடத்தி பங்கேற்கும் இளைஞர்கள், சிறுவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை ஓசியாக கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.

இதே போன்று ஊழியர் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் என நடத்தி ஆயிரக் கணக்கில் பெண்களைத் திரட்டி அவர்களுக்கு சேலை, ஹாட் பாக்ஸ் என விதவிதமான அன்பளிப்புகளுடன் ரூ.200 முதல் 500 வரை பணமும் வழங்குவதால் அமைச்சர் கூட்டம் என்றாலே கூட்டம் அலைமோதிவிடுகிறது.

கடந்த வாரம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூ ட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்போருக்கு 500 ரூபாய் தருவதாகக் கூறி 200 ரூபாய் மட்டுமே கொடுத்ததால் கூட்டத்தில் பங்கேற்றோர் அதிருப்தியில் ஜெயலலிதா படம் போட்ட பணக்கவரை வீசி எறிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக சார்பில் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சிவரக்கோட்டையில் இன்று காலை நடந்தது.

பணம், இலவசம் என்று கூறி அனைத்து ஊர்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூட்டம் நடக்கும் போதே ஒரு பகுதியில் அன்பளிப்புகளையும் பணத்தையும் வழங்க ஏற்பாடு நடக்க கூட்டம் முண்டியடித்தது. இதனை செய்தியாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் அன்பளிப்புகளை வாரி இறைக்கிறார் என்று சர்ச்சையாகிக் கிடப்பதால் செய்தியாளர்களை போலீசாரும், அதிமுகவினரும் துரத்தி அடித்து சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஏ.என்.ஐ.செய்தியாளர் கதிரவன் ரத்தக் காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சரின் தூண்டுதலில் திருமங்கலம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனின் அடாவடி உத்தரவால் போலீசார் தன்னைத் தாக்கியதாக கதிரவன் புகார் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மற்ற செய்தியாளர்கள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் நிகழ்ச்சி நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

More News >>