நூர்ஜஹானா....காஞ்சனா கமலநாதனா? படத் திறப்பு கூட்டத்தில் உளறிய துரைமுருகன் !

திமுகவில் இருந்து மறைந்த பேச்சாளர் திண்டுக்கல் நூர்ஜஹான் பேகத்தை மறைத்துவிட முடியாத அளவுக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கிறார். நேற்று நடந்த அவரது படத்திறப்பு விழாவில் துரைமுருகன் பேசிய பேச்சு, கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

திண்டுக்கல் நூர்ஜஹான் பேகம் கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய ஸ்டாலின், ' திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியில் ஒரு அங்கமாக நூர்ஜஹான் பேகம் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் பேசாத மேடைகளே கிடையாது, அந்த அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சாதாரண வார்டு உறுப்பினர், வட்டச் செயலாளராக இருந்து பொதுமக்களுக்கு சேவையாற்றியுள்ளார். அவரது இழப்பு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும்' என்றார். அவரது மறைவால் கலங்கிய கனிமொழி, ' நூர்ஜகான் அம்மா எப்போ சென்னைக்கு வந்தாலும், என் அம்மாவைப் பார்க்காமல் போகவே மாட்டாங்க. இருவருமே நண்பர்கள் மாதிரி பழகிட்டிருந்தாங்க. தலைவரையோ, என்னையோ பார்க்காமல்கூட ஊருக்குத் திரும்பிடுவாங்க. ஆனால், அம்மாவிடம் பேசாமல் போனதேயில்லே.

கடந்த ஒரு மாசமா அம்மாவைப் பார்க்கவே வரலை. நான் ஏன்னு கேட்டபோது, `என்னால் தலைவர் இல்லாமல் அம்மாவை அந்த நிலைமையில் பார்க்க முடியலை'னு' சொன்னாங்க. கட்சி சார்பா ஒரு கூட்டம் நடக்குதுன்னா, மேடையேறி பேச ரொம்ப விரும்புவாங்க.

மகளிர் அணி கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்காத சமயங்களில் கடுமையாக சண்டை போடுவாங்க' என்றார்.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க நூர்ஜஹான் பேகத்தின் படத்திறப்பு விழாவை நேற்று அன்பகத்தில் வைத்து நடத்தினார் ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சாளர் காஞ்சனா கமலநாதன், கழக மேடையில் பேச வாய்ப்புக் கிடைக்காவிட்டால் கடுமையாகச் சண்டை போடுவார் நூர்ஜஹான். இது அவருக்கான மேடை. ஆனால், அதைப் பார்க்க அவர் உயிருடன் இல்லை' என்றார். இதைக் கேட்ட பேச்சாளர்கள் சிலர், 'எங்களுக்குப் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தடுக்கிறார் கொ.ப.செ திருச்சி சிவா.

பேச்சாளர்களுக்கெல்லாம் இனி நினைவஞ்சலி மட்டும்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டார் காஞ்சனா' எனக் கமெண்ட் அடித்துள்ளனர்.

அடுத்ததாகப் பேசிய துரைமுருகன், நூர்ஜஹான் பேகம் எனச் சொல்வதற்குப் பதில், ' காஞ்சனாவைப் போலக் கடுமையாக உழைத்து மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும். காஞ்சனா வழியை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்' எனப் பேச, ' அரசியலில் கோமா நிலைக்குப் போய்விட்டாரா பொருளாளர்' என சிரித்தபடியே கலைந்துள்ளனர்.

More News >>