பிரபல வங்காள திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் காலமானார்!
பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் கொல்கத்தாவில் இன்று காலமானார்.
95 வயதான மிருணாள் சென் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காள மொழி மற்றும் இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறந்தவர்.
திரைப்படங்களில் புதிய தொழில் நுட்பங்களையும், சமூக அக்கறை கொண்ட படங்களையும் இயக்கி சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு பெரும் புகழ் சேர்த்தவர் மிருணாள் சென்.
தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷன் விருது உள்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்ற மிருணாள் சென் 50ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்தவர். வயது மூப்பு காரணமாக இறந்த சென்னின் உடல் கொல்கத்தாவில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய மகன் வந்தவுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது. தான் இறந்த பின் தனது உடலை பொது இடத்தில் அஞ்சலிக்காக வைக்கக் கூடாது என்றும், தனது உடலுக்கு மலர் வளையம் வைப்பது கூடாது என்றும் சென் தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார்.
இதனால் மிருணாள் சென்னின் மறைவுக்கு மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் மட்டும் தெரிவித்துள்ளனர். மிருணாள் சென்னின் மறைவு வங்காள திரைப்படத் துறைக்கு பேரிழப்பு என மம்தா அதில் தெரிவித்துள்ளார்.