இந்தியா உமிழ்ந்துள்ள கார்பன்டைஆக்ஸைடு 260 கோடி டன்!
ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை அமைப்புக்கு சமர்ப்பிக்கும்படி இந்தியா, ஈராண்டு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. 2014ம் ஆண்டு தரவுகளின்படி இந்தியா 2.607 பில்லியன் (ஏறக்குறைய 260 கோடி) டன் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் 2016 ஜனவரியில் முதன்முறையாக இதுபோன்ற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் அது தயாரிக்கப்பட்டது. அதில் 2.136 பில்லியன் டன் கரியமில வாயுவை இந்தியா வெளியேற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நாட்டிலும் வெளியேற்றப்பட்டுள்ள கார்பன்டைஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோஃப்ளூரோகார்பன், பெர்ஃப்ளூரோகார்பன், சல்ஃபர் ஹெக்ஸாஃப்ளூரைடு ஆகிய பசுமை இல்ல வாயுக்களின் அளவினை கொண்டு இந்த அறிக்கை எழுதப்படுகிறது.
இந்தியா இரண்டாவது முறையாக சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கையில் உள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி உமிழப்பட்ட மொத்த கரியமில வாயு அளவில், ஆற்றல் துறை 73 விழுக்காடும் வேளாண் துறை 16 விழுக்காடும் தொழிற்சாலைகள் 8 விழுக்காடும் கழிவுகள் 3 விழுக்காடும் பங்களித்துள்ளன.
2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பசுமை இல்ல வாயு உமிழப்படுவதில் சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. தனிநபர் கணக்கில் உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா வெளியேற்றுகிறது. தற்போதைய கணக்குப்படி, ஓராண்டில் சீனா உமிழ்வதில் நான்கில் ஒரு பங்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் உமிழ்வதைப் போல் அரை பங்கும் இந்தியா வெளியேற்றுகிறது.
தொழில்நுட்ப ஆலோசனை குழு மற்றும் தேசிய வழிகாட்டல் குழு போன்றவற்றின் வல்லுநர்களின் பரிசீலனைக்கு பிறகு இந்த அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.