ஏடிஎம் உள்ளே நடந்தது என்ன? புதுச்சேரியில் 28 வயது பெண் கைது!
By SAM ASIR
புதுச்சேரியில் ஏடிஎம் உள்ளிருந்தது பணத்தை தூக்கிச் சென்றதான குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் தனியார் வங்கியின் தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) மையம் ஒன்று உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 28) இரவு, இங்கிருந்து 4 லட்சம் ரூபாய் களவாடப்பட்டதாக புகார் எழுந்தது. ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், பணம் நிரப்பிய பணியாளர்களின் கவன குறைவின் காரணமாக இந்தக் களவு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த ஏடிஎம் மையத்தினுள் சித்ரா (வயது 28) என்ற பெண் வந்துள்ளார். உள்ளே வந்த சித்ரா, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதி சரியாக மூடப்படாமல் இருப்பதை கவனித்து, அதை திறந்து உள்ளிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏடிஎம் உள்ளே இருந்து பெண் ஒருவர் பணத்தை எடுத்துச் செல்வதை மும்பையிலிருந்து கண்காணித்த வங்கி ஊழியர்கள் உடனடியாக அருகிலிருந்து உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர், ஏடிஎம் உள்ளே உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகள் மற்றும் அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கொடுத்த தகவல் ஆகியவற்றின் உதவியோடு சித்ராவை சனிக்கிழமை (டிசம்பர் 29) அன்றுகைது செய்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்த இவர் தற்போது புதுச்சேரி கரியமாணிக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
சித்ராவிடமிருந்து 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பணம் நிரப்பிய பணியாளர்களின் கவன குறைவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.