ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து வரலாற்றை மாற்றி எழுதிய ஜாசன் ராய்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் அபார சாதனைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 107 ரன்களும், ஸ்டோனிஸ் 60 ரன்களும், மார்ஷ் 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக பிளாங்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பைர்ஸ்டோ [14], ஹேல்ஸ் [4] என அடுத்தடுத்து வெளியேறினாலும், தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் அதிரடியாக விளையாடினார். அவர் 92 பந்துகளில் [9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] சதம் விளாசினார். அவருக்கு உறுதுணையாக ஜோ ரூட் 59 பந்துகளில் அரைச்சதம் விளாசினார்.
பின்னர் ஜோ ரூட் 91 ரன்களில் வெளியேறினார். ஜாசன் ராயின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஜாசன் ராய் 151 பந்துகளில் [16 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 180 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்களில் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 171 ரன்களே அதிகப்பட்ச ரன் ஆகும்.
தவிர ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகப்பட்ச ரன் இதுதான். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 215 ரன்கள் குவித்ததே அதிகப்பட்சமாகும்.
மேலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகப்பட்ச ரன் இதுவாகும். முன்னதாக, ரோஹித் சர்மா 209 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுத்துள்ளார்.
ஜாசன் ராய் அடித்த 180 ரன் ஆசிய கண்டத்திற்கு வெளியே, இலக்கை துரத்திப் பிடிக்கும்போது எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்னும் இதுதான். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இதே 180 ரன்கள் எடுத்திருந்தார்.