கலிபோர்னியாவிலிருந்து வந்தது ஏன்? பத்திரிகையாளரை துருவிய தூத்துக்குடி போலீஸ்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க வந்திருந்த அமெரிக்க பத்திரிகையாளரிடம் தூத்துக்குடி காவல்துறையினர் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

டிசம்பர் 30ம் தேதி அதிகாலையில் தூத்துக்குடியில் தங்கும் விடுதி ஒன்றிலிருந்து மார்க் ஸ்கியல்லா என்ற 31 வயது வாலிபரை காவல்துறையினர், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியா மாநிலம் ஆக்லேண்ட் பகுதியை சேர்ந்த அவர் தம்மை ஃப்ரீலான்ஸ் என்னும் சுயாதீன பத்திரிகையாளர் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கூறப்படும் பண்டாரம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 29ம் தேதி மார்க், மக்களை சந்தித்து ஸ்டெர்லைட் குறித்து கருத்துகளை கேட்டறிந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவை சேர்ந்த பிரின்ஸ் கார்டோஸா, பத்திரிகையாளர் மார்க் ஸ்கியல்லாவுடன் இப்பகுதிகளுக்குச் சென்றுள்ளார். ஆலை எதிர்ப்பு குழுவை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபுவையும் மார்க் சந்தித்துள்ளார்.

மார்க் ஸ்கியல்லா, சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய பிரச்னைகள் குறித்து பல்வேறு பன்னாட்டு பத்திரிகைகளுக்கு செய்திகளை அளித்து வருகிறார். சுற்றுலா விசாவில் டிசம்பர் மாதம் 4ம் தேதி மார்க் இந்தியா வந்துள்ளார். அவர் வைத்துள்ள விசா இன்னும் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில் பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக மார்க் ஸ்கியல்லாவை விசாரித்த காவல்துறையினர் அவரது மடிக்கணினி, காமிரா மற்றும் அவர் வசம் இருந்த மின்னணு கருவிகள் அத்தனையையும் சோதித்துள்ளனர். மார்க் ஸ்கியல்லாவை அழைத்துச் சென்றது குறித்து பிரின்ஸ் கார்டோஸாவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

மார்க், விசாரணையின்போது சிலரது பெயர்களை கூறியுள்ளதாகவும், தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், முழு விசாரணை முடிந்தபிறகு தேவையான பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

More News >>