முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அணி திரண்ட எதிர்க்கட்சிகள் - கடும் அமளியால் ராஜ்யசபா ஒத்திவைப்பு!

முத்தலாக் மசோதாவிற்கு எதிராக ஒட்டு மொத்தமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படாமல் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த மசோதா கடந்த வியாழனன்று மக்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் பா.ஜ.க வுக்கு போதிய பலமில்லாததால் நிறைவேறுவது சந்தேகம் என்ற நிலையில் இன்று விவாதத்திற்கு வந்தது.

காலையில் அவை கூடியதும் தமிழக அதிமுக எம்.பி.க்கள் காவிரி பிரச்னையில் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு கூடியதும் முத்தலாக் மசோதாவை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்ய முயன்ற போது காங்., திரிணாமுல், அதிமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போதும் அவை அமளிப்பட்டது. நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

More News >>