திருவாரூர் தொகுதிக்கு ஜன.28-ல் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜன. 31-ந் தேதி எண்ணப்படும். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் 50 ஆண்டு காலம் திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி மரணமடைந்தார். அவர் மறையும் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
ஒரு உறுப்பினர் மரணமடைந்தால் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அதனால் திருவாரூர் தொகுதிக்கு பிப்.6-ந் தேதிக்குள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவாரூர் மட்டுமின்றி திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ வாக இருந்த ஏ.கே.போஸ் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது. ஆனால் போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
அதே போன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அ தி மு க எம்.எல்எக்களின் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 18 பேருக்கும் இன்னும் கால அவகாசம் உள்ளதை காரணம் காட்டி அந்தத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
திருவாரூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஜனவரி 10-ந் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம் . ஜனவரி 14-ந் தேதி வரை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஜனவரி 28-ந் தேதி தேர்தலும், 31-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.