புத்தாண்டு முதல் ஃபெட்எக்ஸ் கோ நிறுவனத்தின் புதிய பொறுப்பில் இந்தியர்!
ஃபெட்எக்ஸ் தூதஞ்சல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் புத்தாண்டு தினம் முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்படுவார்.
220 நாடுகளுக்கும் மேலான இடங்களுக்கு கடிதங்களை கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய கூரியர் நிறுவனம் ஃபெட்எக்ஸ் (FedEx Express courier). ஒரு வேலைநாளில் 36 லட்சம் கடிதங்கள் மற்றும் பொருள்களை இந்நிறுவனம் கையாண்டு வருகிறது.
இந்தியாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ் சுப்ரமணியம், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT-B) பயின்றவர். பின்னர் ஸிராகியூஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்ற அவர், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.
இந்நிறுவனத்தில் 27 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட ராஜேஷ் சுப்ரமணியம், அமெரிக்காவின் டென்னஸ்ஸியிலுள்ள மெம்பிஸ், ஹாங்காங், கனடா ஆகிய இடங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு ஃபெட்எக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் என்னும் மார்க்கெட்டிங் பிரிவுக்கு செயல் துணை தலைவராக உயர்த்தப்பட்டார். 2017ம் ஆண்டு முதல் ஃபெட்எக்ஸ் கார்ப்பரேஷனின் செயல் துணை தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பு துறையின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெட்எக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் டேவிட் எல். கன்னிங்ஹாமின் இடத்திற்கு தற்போது ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.