விவேக் வீட்டில் குவா...குவா சத்தம்! குஷியில் பாட்டி இளவரசி
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று வரும் இளவரசி உற்சாகத்தில் இருக்கிறாராம். குடும்ப கோஷ்டி பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், விரைவில் மகன் வழியில் பாட்டி ஆகும் பூரிப்பில் இருக்கிறாராம்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சுதாகரனைத் தேடி அவரது மனைவி உள்பட யாரும் வந்து பார்ப்பதில்லை.
பிளாக்கில் தன்னந்தனியாக உலா வருகிறாராம். சசிகலா சம்பந்தப்பட்டவர்கள் யாராவது வந்து பார்த்தால், அவர்களுக்கு மட்டும் பதில் கொடுக்கிறார். மற்ற நேரங்களில் அவரை சீந்துவார் யாரும் இல்லை. இந்த நிலையில் 15 நாள் பரோலில் வெளியில் வந்திருந்தார் இளவரசி. தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து குடும்ப ஆட்களை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரது சகோதரரைச் சென்று பார்த்தார். இதன்பிறகு பேரக் குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சிறைக்குள் போய்விட்டார்.
பரோல் முடிந்து போகும்போது அழுகையோடுதான் இளவரசி போனார். அவரால் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, இளைய மகள் ஷகிலா ஆகியோரது வாரிசுகளை விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. இந்த சந்திப்பில் இளவரசிக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆறுதல். விரைவில் விவேக் அப்பாவாகப் போகும் தகவல்தான்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது விவேக்குக்கு கல்யாணம் நடந்தது. 2016 ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தத் திருமணத்தில், மன்னார்குடி கோஷ்டிகள் நிரம்பி வழிந்ததால் அந்தத் திருமணத்தில் ஜெயலலிதா தலைகாட்டவில்லை. இருந்தாலும் விவேக்கு தனியாக திருமணப் பரிசைக் கொடுத்தார்.
அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த நேரம், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் விவேக் இருந்தார். பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு ஊர் திரும்பினார். இப்போதைக்குக் குழந்தைகள் வேண்டாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். இப்போது அவரது மனைவி கீர்த்தனா ஏழு மாதமாக இருப்பதால், பாட்டி இளவரசி உற்சாகத்தில் இருக்கிறாராம்.