திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: இந்திய கம்யூனிஸ்ட் ஒருமனதாக முடிவு

வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற இருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க இந்திய கம்யபூனிஸ்ட் கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதனால், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் இருபது சட்டப்பேரவை தொகுதிகள், பேரவை உறுப்பினர்கள் இன்றி உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் ஜனவரி 28-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கலைஞர் வெற்றிபெற்ற திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படவும், மதச்சார்பின்மை காக்கப்படவும் மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதே போன்று மாநில உரிமைகள், அதன் நலன்கள் மற்றும் மக்கள் நலன் என்று எதுக் குறித்தும் கவலைப்படாமல் மத்திய ஆட்சியின் தயவு ஒன்றே போதுமானது என்ற நிலையில் உள்ள அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்பட வேண்டும்.

ஆங்கில புத்தாண்டான 2019 மோடி, எடப்பாடி தலைமையிலான மத்திய, மாநில ஆட்சிகளுக்கு விடை அளித்திடும் ஆண்டாகும்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமு.க.வை ஆதரிப்பது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.

தேசம் காக்க, தமிழகம் மீட்கப்பட திருவாரூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள், தி.மு.க.விற்கு பேராதரவு அளித்து, வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய், மாநில செயற்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More News >>