மதுரையில் அழகிரி வீட்டுக்கு செல்ல மோடி திட்டம்?

தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி மதுரையில் மு.க. அழகிரியின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் மோடியின் வருகையின் போது நிச்சயம் தாம் மதுரையில் இருக்கப் போவதில்லை என அழகிரி தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் லோக்சபா தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார்.

கஜா புயலால் இறந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்காத, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாத பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மதுரை வரும் மோடி, மு.க. அழகிரி வீட்டுக்கு சென்று கருணாநிதி மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை கொம்பு சீவும் வேலைகளில் பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

ஆனால் பாஜக பக்கம் அழகிரி எட்டிப் பார்க்க விரும்பவில்லை. கருணாநிதி மறைவின் போது சென்னை வந்த பிரதமர் மோடி, ஸ்டாலினிடம் அழகிரி எங்கே என கேட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அழகிரி வீட்டுக்கே நேரடியாக சென்று திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் என்பது பாஜகவின் திட்டம். மதுரையில் இப்போது இதுதான் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர்கள், மோடி வரக் கூடும் என்கிற தகவல் அழகிரிக்கு வந்திருப்பது உண்மை. ஆனால் அழகிரியோ மோடியை சந்திக்க விரும்பவில்லை. அன்றைய நாளில் வெளியூர் செல்லப் போவதாக எங்களிடம் கூறி வருகிறார் என்கின்றனர்.

More News >>