பூரிப்படைய வைத்த பெண் காவலரின் செயல்!

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் செயல்பாட்டை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

2018 டிசம்பர் 30ம் தேதி ஞாயிறு அன்று இரவு ஹைதராபாத் நகரின் அப்ஃஸல்கஞ்ச் என்ற பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு இரண்டு மாத பெண் குழந்தை ஒன்றை அப்பகுதி மக்கள் கொண்டு வந்தனர்.

வந்தவர்களுள் ஒருவர் உஸ்மானியா பொது மருத்துவமனை அருகே பெண் ஒருவர் அக்குழந்தையை தம்மிடம் கொடுத்ததாகவும், வெகு நேரங்கடந்த பிறகும் அவர் வரவில்லையென்றும் தெரிவித்தார். குழந்தை அழுததால் வீட்டுக்குக் கொண்டு சென்று பால் புகட்ட முயன்றதாகவும், குழந்தை குடிக்கவில்லையென்றும் கூறிய அவர், அக்கம்பக்கத்தினரின் ஆலோசனையின்பேரில் காவல் நிலையத்திற்கு குழந்தையை கொண்டு வந்தததாகவும் விளக்கி ஒப்படைத்தார்.

பசியால் அழுது கொண்டிருந்த பச்சிளங்குழந்தையை பார்த்து அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் ரவீந்தர் என்ற காவலர் மனம் உருகினார். குழந்தையின் பசியை எப்படி ஆற்றுவது என்று யோசித்த அவருக்கு ஒரு வழி தென்பட்டது.

தமது மனைவி பிரியங்காவை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். வேறொரு காவல் நிலையத்தில் பணியாற்றும் பிரியங்கா, மகப்பேறு விடுப்பில் வீட்டில் இருந்தார். கணவர் போன் செய்ததும் உடனடியாக அப்ஃஸல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு வந்து பாலூட்டி குழந்தையின் பசியை ஆற்றினார். பின்னர் அக்குழந்தை பெட்லபர்ஸ் என்ற இடத்திலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாயை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சாஞ்சல்குடா என்ற பகுதியில் ஒரு பெண் அழுது கொண்டு நின்றிருப்பது தெரிய வந்தது.

அப்பெண்ணிடம் விசாரித்ததில் தாம் மது அருந்தியிருந்தததாகவும் போதையில் குழந்தையை எங்கு யாரிடம் கொடுத்தேன் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண் தம் குழந்தையை அடையாளங்காட்டினார். உரிய விசாரணைக்குப் பின் அக்குழந்தையை குடிகார தாயிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

பெற்ற குழந்தைபேரில் அக்கறையின்றி இருந்த தாயையும், யாரோ ஒருவருடைய குழந்தையின் பசியை பொறுக்கமாட்டால் பாலூட்டிய மற்றொரு தாயைப் பற்றியும் அப்பகுதி மக்கள் பேசி வருகின்றனர்.

குழந்தைக்குப் பாலூட்டிய ரவீந்தர்- பிரியங்கா தம்பதியை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

More News >>