திருவாரூர் இடைத் தேர்தல்: அதிமுகவுக்கு ஆதரவா? புறக்கணிப்பா? திரிசங்கு சொர்க்கத்தில் பாஜக
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் தோல்வி அடையும் என்கிற அச்சத்தால் புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர்கள், தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.
திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற முனைப்பில் திமுக, அதிமுக, அமமுக தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் அல்லது அவரது சகோதரி செல்வி போட்டியிட வேண்டும் என்கிற குரல் திமுகவில் வலுத்து வருகிறது. இது தேவையில்லாத ஒன்று என்கிற கருத்தும் திமுகவில் எழுந்துள்ளது.
அமமுகவைப் பொறுத்தவரையில் மாவட்ட செயலாளர் காமராஜூக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது; அதே நேரத்தில் ஸ்டாலின் போட்டியிட்டால் தினகரனே களமிறங்க வேண்டும் என்பது அமமுகவினரின் எண்ணம்.
அதேபோல் எப்படியாவது வெற்றி ஒன்றை பெற்றாக வேண்டும் என திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கருதுகிறது. இவர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாய நெருக்கடியில் ஆளும் அதிமுக இருக்கிறது.
மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் நோட்டாவிடம் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறது பாஜக.
அதுவும் திருவாரூரில் கட்சிக்கான எந்த ஒரு பலமும் இல்லாத நிலையில் போட்டியிட்டு தோற்பது உறுதி என்பதை தமிழக பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர்; இதனால் அதிமுகவை வலிய ஆதரிப்போம் என்ற குரல் பாஜகவில் எழுந்துள்ளது.
அத்துடன் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்துவிடலாம் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் தமிழக சீனியர்கள் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவுக்கு ஆதரவா? தேர்தல் புறக்கணிப்பா? திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறது தமிழக பாஜக.
- எழில் பிரதீபன்