ஐயப்பனை அதிகாலையில் ரகசியமாக தரிசித்த இரு பெண்கள் - சபரிமலையில் பரபரப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் ரகசியமாக இரு பெண்கள் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக சபரிமலைக்கு சென்ற பெண்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலம் முழுவதும் தீபமேற்றி போராட்டம் நடத்தினர்.

ஆனால் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள மாநில ஆளும் இடதுசாரி முன்னணி அரசு முனைப்பு காட்டி வருகிறது. பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று கேரளாவில் 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற மகளிர் சுவர் போராட்டத்தையும் பிரமாண்டமாக நடத்தியது.

இந்நிலையில் மகளிர் சுவர் போராட்டம் நடந்த சூட்டோடு இன்று அதிகாலையில் இரு பெண்களை ஐயப்ப தரிசனம் செய்யவும் அரசு ஏற்பாடு செய்து விட்டது. அதிகாலை 3.45 மணியளவில் சீருடை அணியாத போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்களும் பதினெட்டு வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இரு பெண்களும் மற்ற பக்தர்களுக்கு அடையாளம் தெரியாத வகையில் கறுப்பு உடையால் முகத்தை மூடிச் சென்று ரகசியமாக சாமி தரிசனம் செய்த தகவல் தாமதமாகவே உறுதிப்படுத்தப்பட்டதால் பரபரப்பாகி கிடக்கிறது சபரிமலை வளாகம்.

 

More News >>