திருவாரூரில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி - சீமான்!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையடுத்து திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகளில் மும்முரமாகிவிட்டன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுவது உறுதியான நிலையில் வேறு எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில் திருவாரூர் தொகுதியில் தனித்தே போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. வேட்பாளர் பெயர் வரும் 10-ந் தேதி அறிவிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கடந்த 2016 -ம் ஆண்டு இத்தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1427 வாக்குகளை பெற்றிருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் பெற்ற 1254 வாக்குகளைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சி கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தது.