ஓட்டுக்கு ரூ10,000- உதயசூரியன், குக்கரை வீழ்த்த அதிமுக அதிரிபுதிரி வியூகம்!

திருவாரூர் தொகுதியில் குக்கரையும் உதயசூரியனையும் வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது ஆளும்கட்சியான அதிமுக. 

ஒரு ஓட்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திருவாரூரில் அ.ம.மு.க மாவட்ட செயலாளராக காமராஜ் இருக்கிறார்.

தி.மு.க மாவட்ட செயலாளராக பூண்டி கலைவாணன் இருக்கிறார். இவர்கள் இருவரும் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான சான்ஸ் இருப்பதால், நல்ல வேட்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆர்.கே.நகரில் தினகரன் செய்த குளறுபடிகளை எல்லாம் கணக்குப் போட்டு நிர்வாகிகளுக்குச் சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றிப் பேசும் டெல்டா பகுதி அதிமுகவினர், ' சசிகலா குடும்பத்துக்கு திருவாரூரில் எந்த செல்வாக்கும் இல்லை.

அதனால்தான் சாதிரீதியாக அவர்களால் எதுவும் செய்ய முடியாது. நானும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான் என தினகரன் பேசினாலும், அவரை சாதி வட்டத்துக்குள்தான் இந்தப் பகுதி மக்கள் பார்க்கின்றனர்.

இங்கு தினகரனின் ஆதிக்கம் எதுவும் எடுபடாது. தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் முன்கூட்டியே நாங்கள் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டோம்.

ஆர்.கே.நகரைப் போல இங்கு 20 ரூபாய் டோக்கன்கள் எதுவும் செல்லுபடியாகாது.

கஜா நிவாரணத்துக்காக மத்திய அரசின் தொகை ஓரளவு வந்து சேர்ந்துவிட்டதால், அதையே நிவாரண உதவியாக வாக்காளர்களது வங்கிக் கணக்கில் செலுத்த இருக்கிறோம். தவிர, நிவாரணப் பணிகளில் அரசு செயல்பட்ட விதத்தையும் மக்கள் அறிவார்கள்.

அனைத்து அமைச்சர்களும் டெல்டாவிலேயே தங்கியிருந்து நிவாரணப் பணிகளை கவனித்தனர். எனவே, எங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எங்களுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி. தினகரனின் திட்டம் எல்லாம் தவிடுபொடியாகும். ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவோம்' என்கிறார்கள்.

 

'திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றால், எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும் செல்வாக்குடைய தலைவராக மாறுவார் என்கின்றனர் கொங்கு பெல்ட் நிர்வாகிகள். கட்சிக்குள் பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுவிட்டதால், முழுக்க எடப்பாடியை நம்பிக் களமிறங்குகிறார்கள் கட்சி பொறுப்பாளர்கள். இதுதொடர்பாக மதுரையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கியிருக்கிறார் முதல்வர். அவருடைய நேரடி கட்டுப்பாட்டின்கீழ் திருவாரூர் தொகுதி தேர்தல் நடக்க இருக்கிறது. உறுதியாக வெற்றி பெறுவோம்' என்கிறார்கள் அதிமுக பொறுப்பாளர்கள். ///

More News >>