ஆளுநர் உரை தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையோபலனோ இல்லாத பம்மாத்து அறிக்கை: மு.க.ஸ்டாலின்
2019ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரை அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோற்றுவிட்ட அ.தி.மு.க. அறிக்கை என்றும் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையோ – பலனோ இல்லாத பம்மாத்து அறிக்கை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
அனைத்து துறைகளிலும் அரசியல் சட்டப்படி தோற்றுவிட்ட அதிமுக அரசின் “உரையை” அரசியல் சட்டப்படி மாநிலத்தின் தலைவராக இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வாசித்திருப்பது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. ஒரு முதலமைச்சர் தனது பதவிக்குள்ள பொறுப்பின் அடிப்படையில் வழக்கமாக கோப்புக்களை பார்க்கும் பணிக்காக “திறமைமிக்க தலைமை” என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் புகழாரம் சூட்டியிருப்பது தோற்று விட்ட அரசை தேர்தல் கூட்டணிக்காக தூக்கி நிறுத்த முயற்சிப்பதாகவே அமைந்திருக்கிறது.
ஆளுநர் உரையில் தமிழக முன்னேற்றத்திற்கான எந்தவொரு புதிய திட்டங்களும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து அத்திக்கடவு- அவினாசி திட்டம் பற்றி ஆளுநர் உரை, நிதி நிலை அறிக்கை எல்லாவற்றிலும் “அறிவிப்புகள்” இடம் பெறுவது போல் இந்த உரையிலும் இடம்பெற்றுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இடம்பெறவும் இல்லை- மேகதாது அணை கட்ட அனுமதியளித்த மத்திய அரசுக்கு ஒரு கண்டனத்தைக் கூட அதிமுக அரசு தெரிவிக்கவில்லை.
“அரசு கொள்கை முடிவு எடுத்து மூடவில்லை” என்று ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய தீர்ப்பாயம் இந்த அரசின் முகத்தில் கரி பூசிய பிறகும் “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணை பிறப்பித்தது” என்று ஆளுநர் உரையில் கூச்சமேயின்றி மார்தட்டிக் கொள்வது தன் முதுகில் தானே தட்டிக் கொள்வது போலிருக்கிறது.பாராளுமன்ற தேர்தல் கால பரப்புரைக்காக இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி “சிலாகித்து”ப் பேசியிருந்தாலும், முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்று ஆளுநர் உரையின் எந்தப் பக்கத்தில் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.
“15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்ட இடத்தில் கஜா புயலுக்காக 10 சதவீத நிதியைக் கூட வழங்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனமார்ந்த பாராட்டு,” “மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தோப்பூர் எய்ம்ஸ் மருத்துமனையை மூன்று வருடங்கள் கிடப்பில் போட்டு, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நிதி ஒதுக்கிய மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்றி” என்று அதிமுக அரசின் ஜால்ரா சப்தம்தான் ஆளுநர் உரையின் பக்கங்கள் பலவற்றில் எதிரொலிக்கிறது. ஆக இந்த ஆளுநர் உரை அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்விடைந்து விட்ட (A total failure report of the Government அதிமுக அரசின் அறிக்கை- இதனால் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையோ பலனோ இல்லாத பம்மாத்து அறிக்கையாகவே அமைந்துள்ளது.
“போகி” கழிந்து பொங்கல் வருவது போல் ஊழல் மயமான அதிமுக ஆட்சி கழிந்து மக்கள் விரும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி மீண்டும் அமைந்தால்தான்- மக்களுக்கு தேவையான ஆக்கபூர்வமான திட்டங்கள் அடங்கிய- கொள்கைகள் அடங்கிய ஆளுநர் உரை வெளிவரும் என்று கருதி- அந்த நாளை எதிர்பார்த்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை.
இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுருந்தார்.