எவ்வித எதிர்ப்புமின்றி ஐயப்ப தரிசனம் திவ்யமாக இருந்தது - கேரள பெண் பிந்து

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் எந்த எதிர்ப்பும் இன்றி திவ்யமாக ஐயப்பனை தரிசிக்க முடிந்தது என்று கேரள பெண் பிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றம் அனுமதி கொடுத்தும் பலகட்ட போராட்டங்களுக்குப் பின் முதன் முறையாக கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று ஐயப்பனை தரிசித்துள்ளனர். அதிகாலையில் பெண்கள் இருவரும் எதிர்ப்பாளர்களின் கண்களில் படாமல் சன்னிதானம் வரை சென்றது கேரளாவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐயப்ப தரிசனம் குறித்து கேரளப் பெண் பிந்து கூறியதாவது: நாங்கள் இருவரும் சன்னிதானத்திற்குள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அப்போது சன்னிதானத்திற்குள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் ஐயப்பனை தரிசிக்க போதிய நேரம் கிடைத்தது.

அப்போது பக்தர்கள் யாரும் எதிர்ப்பு காட்டவில்லை. தரிசனம் செய்துவிட்டீர்களா? என்று தான் அன்பாக விசாரித்தனர் என்றார்.

இந்நிலையில் பெண்கள் சன்னிதானத்தில் நுழைந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் கோயில் நடை திடீரென சாத்தப்பட்டது. கோயிலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று பரிகாரம் செய்யப்பட்ட பின் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

கோயில் நடை சாத்தப்பட்டதற்கு ஆளும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடை சாத்தப்பட்டது ஏன் என்பதற்கு தந்திரியும், தலைமை குருக்களும் பதிலளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கனம் ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ஐயப்பனை இரு பெண்களும் தரிசனம் செய்ததற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இரு பெண்களையும் பம்பை முதல் சன்னிதானம் வரை ஆம்புலன்சில் ரகசியமாக அழைத்துச் சென்றதாக மாநில பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குற்றம்சாட்டியதுடன், சி.சி.டி.வி காட்சிகளை ஆராய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததுடன், பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களின் வீடுகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

More News >>