ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில், மக்கா நகரம் மற்றும் மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் சென்று வருகின்றனர்.

பத்து லட்ச்ம் பேர் மக்கள் தொகையின் அடிப்படையில் 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில், ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். கடந்த 2012ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.

ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதால் மக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் மதீனாவில் உள்ள முகம்மது நபி மசூதி ஆகிய இடங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிகை தவிர்ப்பதற்காக மேற்கண்ட மசூதிகளை விரிவுபடுத்தி கட்ட சவுதி அரசு முடிவெடுத்தது. இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளூர் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதமும், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுவதாக கடந்த 2013ம் ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது. 2017ம் ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையேயான இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் சவுதி அமைச்சர் முகம்மது பென்டன் ஆகியோர் இடையே சமீபத்தில் டெல்லியில் கையொப்பமானது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மததிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “வரும் 2022ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம் பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியத்தை ரத்து செய்யடுகிறது” என தெரிவித்தார்.

மேலும், “கண்ணியமான முறையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது. ஹஜ் மானியத்துக்காக செலவழிக்கப்படும் தொகை இனி சிறுபான்மையினத்தவர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும்” என்றார்.

More News >>