திருவாரூர்: மன்சூர் அலிகானை வேட்பாளராக களமிறக்கும் நாம் தமிழர் கட்சி?
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது. திமுக, அதிமுக, அமமுகவில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழந்தது. அதேபோல் திருவாரூர் தொகுதியிலும் ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும் என்கின்றனர் நாம் தமிழர்கள்.
இன்னொரு பக்கம், திமுக ஜெயிக்கக் கூடாது என்பதற்காக அதிமுகவை ஆதரிப்போம் என்கிறது பாஜக. இப்படி பலமுனை தாக்குதல்களை திமுக எதிர்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருவாரூரில் ஸ்டாலின், தினகரன், திவாகரன் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்க வேண்டும் என அவரது தம்பிகள் விரும்புகின்றனர். அதே நேரத்தில் திருவாரூர் கள நிலவரத்தை அறிந்த நாம் தமிழர் தம்பிகளோ, இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மையினர் வாக்குகளை கணிசமாக பெற முடியும் என்கின்றனர்.
இந்த அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் அல்லது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹூமாயூன் ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக்க வேண்டும் என்கிற கருத்துவும் நாம் தமிழர் கட்சியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.