அடகு வைத்த அப்பனும் புனுகு பூசும் புதல்வனும்.. ஸ்டாலின் மீது நமது அம்மா நாளேடு பாய்ச்சல்
சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்ததை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ‘அடகு வைத்த அப்பனும் புனுகு பூசும் புதல்வனும்’ என்ற தலைப்பில் நமது அம்மா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
ஆளுநர் வாய் திறக்கும் முன்னே, அவையை விட்டு கதவு திறந்து ஓடி வந்திருக்கிறார் கருணாநிதி புத்திரர்.
தமிழகத்தின் சட்டப்பேரவை வரலாற்றில் அநேகமாக அதிக முறை வெளிநடப்பு செய்த வீராதி வீரர், திருவாளர் துண்டுச் சீட்டாகத்தான் இருக்க முடியும்.
வழக்கம் போலவே, வெளிநடப்புக்கு எழுதிக் கொண்டு போய் இடுப்பில் செருகி வைத்திருந்த காகிதத்தை வைத்துக் கொண்டு எப்போதும் போலவே, அரசின் மீது அடுக்காத பழிகளை பத்திரிக்கையாளர்களைக் கூட்டி பந்தி வைத்தார். இடையிடையே எடுபிடி அரசு என்று கழக அரசின் மீது நரம்பில்லா நாக்கால் வரம்பு மீறி தாக்கினார்.
அது சரி, இவரும் இவரது தோப்பனாரும் மைனாரிட்டி ஆட்சி நடத்திய போது பறிகொடுத்த ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டது கழக அரசல்லவா?
பத்து தெருக்களை உள்ளடக்கிய பாண்டிச்சேரிக்குக் கூட ஜிபர் மருத்துவமனை என்று மத்திய அரசின் சார்பிலே பிரம்மாண்ட மருத்துவ வளாகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய விடுதலைக்குப் பிறகு மத்திய சுகாதாரத்துறையின் சார்பிலே முதன்முறையாக தென்பாண்டிய நாட்டின் தோரண வாயிலாம் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்திருப்பது நம் கழக அரசின் கடமைகுன்றா முயற்சியால்தானே.
அதுமட்டுமா... புரியாம, தெரியாமல் இந்த தொளபாதி கையெழுத்துப் போட்டு, கொண்டு வந்த துன்பங்களில் ஒன்றான மீத்தேனை துரத்தியடித்ததும் நம் கழக அரசுதான்.. அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின் தடைகளால், தமிழகத்தை இருளில் தள்ளிய திமுகவின் இருண்ட காலத்தில் இருந்து இன்று தமிழகத்தை மின் மிகை மாநிலமாய் மீட்டெடுத்திருப்பதும் நம் கழக அரசுதான்..
இப்படி நீளும் கட்டுரையின் முடிவில், தமிழகத்தின் உரிமைகளையெல்லாம் காவு கொடுத்துவிட்டு கம்பி நீட்டியதும் திமுக ஆட்சியே என்றிருக்க அவர்களை அடகு திமுக அரசு என்று அழைக்கலாமே என விமர்சிக்கப்பட்டுள்ளது.