திருவாரூர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழிசை, கே.டி. ராகவன், நாராயணன், எச். ராஜா போட்டியிடுவார்களா? கொளுத்திப் போடும் நெட்டிசன்கள்
திருவாரூர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன், கே.டி. ராகவன், நாராயணன், எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் போட்டியிடுவார்களா? என நெட்டிசன்கள் கொளுத்திப் போடுகின்றனர்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி முதன் முதலாக வேட்பாளரையே அறிவித்துவிட்டது. அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது போட்டியிடுகிறார்.
திமுக, அதிமுக, அமமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு என்கிற விவாதமும் அனல் பறக்கிறது. அதே நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதிலும் மும்முரமாக இருக்கின்றன.
அதேநேரத்தில் பாரதிய ஜனதா கட்சியோ, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் திருவாரூரில் போட்டியிட்டு தோற்கப் போவது உறுதி; இது வரும் லோக்சபா தேர்தலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தேர்தலையே புறக்கணித்துவிடுவது என்கிற முடிவில் இருக்கிறது.
இந்நிலையில் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தி, பாஜக பயப்படாமல் களத்துக்கு வர வேண்டும். அதுவும் தமிழிசை, கே.டி. ராகவன், நாராயணன், எச். ராஜா போன்ற தலைவர்கள், திருவாரூரில் களம் காண வேண்டும் என கொளுத்திப் போட்டு வருகின்றனர்.