கருணாநிதி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் - ஓ.பி.எஸ்.புகழாரம்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்முகத் தன்மை கொண்டவர் கருணாநிதி என தீர்மானத்தை முன்மொழிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரிதி இளம்வழுதி, நாகூர் மீரான், உக்கம் சந்த் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கும் கஜா புயலில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. துணை முதலமைச்சரும் அவை முன்னவருமான ஓபன்னீர்செல்வம் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். சிறந்த எழுத்தாளர், தமிழ்ப் பற்றாளர், சிறந்த பேச்சாளரான கருணாநிதி, பன்முகத் தன்மை கொண்ட தலைவர் என புகழாரம் சூட்டினார்.
சமூக நீதிக்காக அரும்பணியாற்றியவர். இந்திய அரசியலின் மிகப்பெரும் சக்தியாக திகழ்ந்தவர். கட்சியிலும், ஆட்சியிலும் மன உறுதியுடன் செயல்பட்டவர். ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் தமிழக நலனுக்காக உழைத்த கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்றும் ஓ.பி.எஸ். புகழாரம் சூட்டினார்.