திருவாரூர் இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம்
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கலும் இன்று தொடங்கி விட்டது.
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நிறைவடையவில்லை. இடைத்தேர்தல் அறிவிப்பால் புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் த லைவர் சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.