திருவாரூரிலும் களமிறங்கும் நடிகர் விஷால்?

திருவாரூர் இடைத்தேர்தலை மையமாக வைத்து ஆடுபுலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளில் யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு பல பதில்கள் கொடுக்கப்படுகின்றன.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தார் நடிகர் விஷால். அவரை தற்போது திருவாரூரில் போட்டியிட வைக்கலாமா? என்ற விவாதம் களைகட்டத் தொடங்கிவிட்டதாம்.

ஆர்கேநகர் இடைதேர்தலில் போட்டியிட விரும்பினார் நடிகர் விஷால். அவரை தேர்தல் களத்துக்குள்ளேயே வரவிடாமல் துரத்தியது அதிமுக.

மதுசூதனன் ஆட்களின் அதிரடியைத் தாங்க முடியாமல் தேர்தலில் இருந்து பின்வாங்க வைக்கப்பட்டார் விஷால். இதன்பின்னர் திருப்பரங்குன்றம் தேர்தலை எதிர்பார்த்தார்.

அங்கும் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சரவணன் போட்ட வழக்கு பெண்டிங்கில் இருப்பதால், தேர்தல் நடக்கவில்லை. தற்போது திருவாரூர் தொகுதிக்கான தேதியை அறிவித்துவிட்டது ஆணையம்.

இந்தநிலையில், விஷாலை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளனர் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளவர்கள். இதைப் பற்றி விஷாலிடமும் பேசியுள்ளனர்.

அப்போது, `தலித் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதி இது. 40 சதவீத தலித் வாக்குகள் தொகுதிக்குள் இருக்கின்றன. எந்த சாதியும் பெரும்பான்மை இல்லாத தொகுதி இது. அங்குள்ள இடைநிலை சமூகங்களால் தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சாதி முத்திரை இல்லாத உங்களுக்கு (விஷால்) லாபத்தைக் கொடுக்கும். விஜயகாந்த் மகன் கூட இந்த அரசுக்கு எதிராகப் பேசுகிறார். நம்மால் ஏன் எதிர்க்க முடியாது. திருவாரூரில் போட்டியிட்டால் உறுதியாக வெல்வோம். ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று தினகரன் வெற்றி பெறவில்லையா..மக்கள் நீதி மய்யம் மூலமாக தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுயேட்சையாக போட்டியிட்டால், நாங்கள் உங்களை ஆதரிப்போம்' எனக் கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தமிழக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார் விஷால். தயாரிப்பாளர் சங்க விவகாரம் உள்பட சில விஷயங்களில் அரசுக்கு எதிராகப் பேசினார்.

இந்த அரசாங்கத்தை அவர் பலவீனமாகத்தான் பார்க்கிறார். ஆனாலும், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவையும் விஷால் எடுக்கவில்லை. 'திருவாரூரில் வெற்றி பெற்றுவிட்டால், அரசியலில் ஒரு ரவுண்ட் வந்துவிடலாம்' என அவரை உசுப்பேற்றி வருகின்றனர் ஆதரவாளர்கள்.

More News >>